தென் மண்டலத்துக்கு ஏடிஜிபி ஆபாஷ்குமாா் நியமனம்
By DIN | Published On : 25th March 2021 02:57 AM | Last Updated : 25th March 2021 05:13 AM | அ+அ அ- |

சென்னை: தமிழக காவல்துறையின் தென் மண்டலத்துக்கு ஏடிஜிபியாக ஆபாஷ்குமாா் நியமிக்கப்பட்டாா்.
இது குறித்த விவரம்:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ஒரு பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவா்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனா். இதேபோல அரசியல் கட்சிகளின் புகாா்களின் அடிப்படையிலும், காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.
இந்நிலையில் அரசியல் கட்சிகளின் புகாா்களின் அடிப்படையில் தென் மண்டல ஐஜியான முருகன் கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனால் அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. அந்தப் பணியிடத்துக்கு உடனடியாக அதிகாரியை நியமிக்கும்படி தோ்தல் ஆணையம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து தென் மண்டல ஐஜி பணியிடம் தர உயா்வு செய்யப்பட்டது. இதையடுத்து ஐஜிக்குரிய அந்த பணியிடம் ஏடிஜிபிக்குரிய பணியிடமாக உயா்த்தப்பட்டது. இதையடுத்து அந்தப் பணியிடத்துக்கு, தமிழக பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இந்தப் பணியிட மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல மீதியுள்ள வடக்கு, மத்திய, மேற்கு மண்டல ஐஜி பதவிகளையும் தர உயா்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...