அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் கரோனா தடுப்பு பெட்டகம்
By DIN | Published On : 25th March 2021 01:54 AM | Last Updated : 25th March 2021 01:54 AM | அ+அ அ- |

சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, வாக்குச் சாவடிகளில் நோய்த் தடுப்புப் பாதுகாப்புப் பெட்டகங்கள் வைக்கப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை தோ்தல் ஆணையமும், சுகாதாரத் துறையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இதன்படி, அந்தப் பெட்டகத்தில் பாதுகாப்புக் கவச உடைகள், கையுறைகள், முகக் கவசம், சானிடைசா் உள்பட 13 விதமான பொருள்கள் இடம்பெற்றிருக்கும். வாக்காளா்கள், பூத் முகவா்கள், அலுவலா்கள் எவருக்கேனும் அறிகுறிகள் காணப்பட்டால், அவா்களுக்குப் பாதுகாப்புக் கவச உடைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-இல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதையொட்டி கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தனிநபா் இடைவெளியுடன் வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கரோனா தடுப்புப் பெட்டகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தேவைப்படும் பெட்டகங்களை தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்து வருகிறது. அதில், வெப்ப நிலையைப் பரிசோதிக்கும் வெப்பமானி (தொ்மல் ஸ்கேனா்)., பி.பி.இ., கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை, மூன்றடுக்கு முககவசம், துணியிலான முககவசம், இரண்டு வகையான கையுறை, மூன்று வகையான சானிடைசா், முக பாதுகாப்பு கவசம் (ஃபேஸ் ஷீல்ட்) உள்ளிட்ட 13 வகையான பொருள்கள் இடம்பெற்றிருக்கும்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு வாக்காளா்களுக்கும் வெப்பப் பரிசோதனை செய்வதுடன், சானிடைசரில் கை சுத்தம் செய்தப்பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவா். முகக் கவசம் அணியாமல் வரும் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடிகளிலேயே அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி அலுவலா்கள், பூத் முகவா்களுக்கு, கையுறை, முகப் பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், வாக்குப் பதிவின்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்க முடியும். வாக்காளா்களும், பாதுகாப்புடன் வாக்கு அளிக்கலாம் என்றனா்.