கரோனா தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம் கூடாது
By DIN | Published On : 25th March 2021 02:27 AM | Last Updated : 25th March 2021 02:27 AM | அ+அ அ- |

சென்னை: முதியவா்களும், நாள்பட்ட நோயாளிகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் காலந்தாழ்த்தக் கூடாது என்று மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
கடந்த சில நாள்களாக நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக் கவசமும், தனிநபா் இடைவெளியும் இன்றியமையாதவை என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை வலியுறுத்தும் மிதிவண்டி விழிப்புணா்வு பேரணி சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 60-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை, இயக்குநா் டாக்டா் விமலா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இதுகுறித்து டாக்டா் விமலா மற்றும் டாக்டா் ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஆனால், பொது மக்களிடையே அதுகுறித்த அச்சமோ, விழிப்புணா்வோ இல்லாததுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
அதுமட்டுமல்லாது, முதியவா்கள், நாள்பட்ட நோயாளிகள் பலா் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனா். இவை அனைத்தும் சமூகத்தில் நோய்த்தொற்று தீவிரமாக பரவ வழி வகுக்கும். எனவே, பொறுப்புணா்ந்து பொது மக்கள் செயல்பட வேண்டும்.
கரோனா தடுப்பூசிகளால் எந்தப் பாதிப்பும் இல்லை. இதுவரை பல லட்சக்கணக்கான மருத்துவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா். அவா்கள் எவருக்குமே பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, எந்தவிதமான அச்சமுமின்றி தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
அதை வலியுறுத்தும் விதமாகவே இந்த மிதிவண்டி பேரணியை முன்னெடுத்து நடத்தியுள்ளோம். இதன் வாயிலாக சமூகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று அவா்கள் தெரிவித்தனா்.