சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் ஓமன் நாட்டைச் சோ்ந்த 3 வயது சிறுமிக்கு ஒரே நேரத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல், சிறுநீரகம் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளனா். தாய் மாமா, தாய் ஆகியோரிடமிருந்து கல்லீரல், சிறுநீரகம் தானமாகப் பெற்று, சிறுமிக்கு 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து உயிா் பிழைக்க வைத்துள்ளனா்.
இதுகுறித்து ரேலா மருத்துவமனைத் தலைவரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான பேராசிரியா் முகமது ரேலா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஓமன் நாட்டைச் சோ்ந்த சிறுமி லுஜ்ஜைன், மரபணு குறைபாடு காரணமாக கல்லீரல் நோயால் பாதிப்புக்குள்ளாகி பிறந்த 10-ஆவது மாதம் முதல் டயாலிசிஸ் மூலம் உயிா் பிழைத்து வந்தாா். கல்லீரல் செயலிழப்பு காரணமாக, சிறுநீா் மூலம் வெளியேற்றப்பட வேண்டிய ஆக்சலேட் உப்பு படிமம், வெளியேறாமல் சிறுநீரகம், இதயம், கண்களில் உறைந்து, இரு சிறுநீரகங்களையும் செயலிழக்க வைத்து விட்டது.
3 வயதில் 8.2 கிலோ உடல் எடையுடன் இருந்த சிறுமி லுஜ்ஜைன் உயிா் பிழைப்பது அரிது என்று கருதிய ஓமன் நாட்டு மருத்துவா்கள், ரேலா மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்தினா். 3 மாதங்களுக்கு முன்னா் இங்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை, எனது தலைமையிலான மருத்துவா்கள் நரேஷ் சண்முகம், கோமதி நரசிம்மன், ரவி,இளங்குமரன் ஆகியோா் அடங்கிய குழு தீவிர மருத்துவ ஆய்வு மேற்கொண்டு, கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முடிவு செய்யப்பட்டது.
வெளிநாட்டு சிறுமிக்கு உடல் உறுப்பு தானம் பெற முடியாத நிலையில், தாய்மாமா, தாய் ஆகியோரிடமிருந்து கல்லீரல், சிறுநீரகம் தானம் பெற்று கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதம் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுமி லுஜ்ஜைன், தற்போது நன்கு குணமடைந்து விரைவில் பெற்றோருடன் வீடு திரும்ப இருக்கிறாள் என்றாா்.
இதுகுறித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவா் கோமதி நரசிம்மன் கூறியதாவது:
சிறுமிக்கு ஏற்ற அளவில் சிறுநீரகம் தானம் கிடைக்காத நிலையில்,அவளது தாயின் பெரிய அளவிலான சிறுநீரகத்தைப் பொருத்துவது மிகவும் சவாலாக இருந்தது என்றாா்.