ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பாக ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 நோயாளிகள் பலி
By DIN | Published On : 13th May 2021 03:24 AM | Last Updated : 13th May 2021 03:24 AM | அ+அ அ- |

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திருந்த 6 கரோனா நோயாளிகள் அடுத்தடுத்து புதன்கிழமை உயிரிழந்தனர். இதேபோன்று ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனைகளில் காத்திருந்த பலரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கரோனா தொற்றுக்கு நாள்தோறும் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னையில் மட்டும் தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. அதில் 30 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் முழுமையாக நிரம்பியுள்ளதால் பலர் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அவ்வாறாக ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் மற்றும் கிண்டி கரோனா மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த வாகனங்களில் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்தி உயிர் வாழக் கூடிய இக்கட்டான நிலை நீடிக்கிறது.
மருத்துவமனை முன்புறம் நாள்கணக்கில் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இதனால் தீவிர பாதிப்புக்குள்ளான சிலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்க நேரிடுகிறது. அந்த வகையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பாக 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதன்கிழமை நின்று கொண்டிருந்தன. அதில் இருந்த ஆறு பேர் அடுத்தடுத்து சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்களது உறவினர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். சிலர் விரக்தியில் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், அந்த இடத்தில் சில நிமிடங்களுக்கு அசாதாரண சூழல் நிலவியது.