விலங்குகளைத் தொற்று பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
By DIN | Published On : 13th May 2021 03:23 AM | Last Updated : 13th May 2021 03:23 AM | அ+அ அ- |

சென்னை: உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கரோனா தொற்று பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சி.யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறையில் உயிரியல் பூங்காக்கள் மற்றும் இயற்கை காடுகளில் வாழும் வனவிலங்குகள் கரோனா பாதிப்பு இல்லாத வண்ணம் பராமரிக்க வனத்துறையில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, ஏப்.20-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
வன உயிரியல் பூங்காவில் உள்ள கூடங்களில் நாள்தோறும் கிருமி நாசினி தெளித்தல், பூங்காவில் உணவு கொண்டு வரும் வாகனங்களை தூய்மைக் கூடம் அமைத்து சுத்தப்படுத்துதல், பூங்கா ஊழியர்களுக்கு நாள்தோறும் உடல்நிலை பரிசோதித்தல், முகக் கவசம், கையுறை அணிதல், தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், வன விலங்குகள் உணவை புறஊதாக் கதிர்கள் மூலம் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் மூலம் தொடர்ந்து செய்யப்படுகிறது.
கால்நடை மருத்துவர்கள் குழு தொடர் கண்காணிப்பு மூலமும், சிசிடிவி கேமிரா மூலமும் வன விலங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சிறப்புப் படை: இயற்கையாக காடுகளில் வாழும் விலங்குகளின் பாதுகாப்புக்காக சிறப்புப் படை அமைத்து, சரகர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் கொண்ட குழு இரவு, பகல் நேரங்களில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
வனவிலங்குகளில் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு கிராம மக்களிடையே தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.