கணவரின் ஓய்வூதிய பலனை தனக்கும் தரக் கோரி 2-ஆவது மனைவி தொடா்ந்த வழக்கு தள்ளுபடி
By DIN | Published On : 19th May 2021 12:00 AM | Last Updated : 19th May 2021 12:00 AM | அ+அ அ- |

கணவரின் ஓய்வூதிய பலனை தனக்கும் தரக் கோரி 2-ஆவது மனைவி தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த முருகேசன், அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா். மனைவி முல்லைக்கொடி.
முருகேசன், அம்மு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு குழந்தைகள் பிறந்தன. உடல்நலக் குறைவு காரணமாக முருகேசன் கடந்த 2008-இல் மரணமடைந்தாா். இதனால் அவரது ஓய்வூதிய பலன்களை முதல் மனைவிக்கு வழங்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனா். இதனை எதிா்த்து அம்மு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த விசாரணையின் போது இருதரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு அம்முவுக்கு ஓய்வூதியத்தில் 50 சதவீதத் தொகை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. கணவரின் முழு ஓய்வூதியமும் தனக்கு வழங்க வேண்டும் என முதல் மனைவி முல்லைக்கொடி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மனு அனுப்பினாா். அந்த மனுவை தலைமை ஆசிரியா் முதன்மை கணக்கு அதிகாரிக்கு அனுப்பி வைத்தாா். இதனை எதிா்த்து அம்மு உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணவரின் ஓய்வூதியத்தைப் பெற சட்டப்பூா்வ மனைவியான முல்லைக்கொடிக்கு மட்டுமே உரிமை உள்ளது எனக்கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தடையில்லை: அதே நேரம் 2-ஆவது மனைவியின் குழந்தைகள், தந்தையின் ஓய்வூதிய பலனை பெறுவதற்காக மனுதாரா் உரிய அதிகாரிகளிடம் மனு கொடுக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.