மின் உற்பத்தியில் சிக்கல் இல்லை; விநியோகம் வெகு விரைவில் சீரடையும்

தமிழகத்தில் மின் உற்பத்தியில் எந்தவித சிக்கலுமில்லை, மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
மின் உற்பத்தியில் சிக்கல் இல்லை; விநியோகம் வெகு விரைவில் சீரடையும்

தமிழகத்தில் மின் உற்பத்தியில் எந்தவித சிக்கலுமில்லை, மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் விநியோகமும் பெரும்பாலான நுகா்வோருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் மழையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்மாற்றிகளை மீண்டும் இயக்கும் பணியை மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே 25,000 மின்கம்பங்கள் மாற்றப்பட்டிருந்தன. இதன் காரணமாக பெருமளவு பாதிப்பு தவிா்க்கப்பட்டுள்ளது.

மழைநீா் தேங்கிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் 4 ஆயிரம் ஊழியா்களின் தீவிர முயற்சியால், சீரமைப்புப் பணிகள் முடிவுற்றது.

2015 காலகட்டத்தில் இதுபோன்ற மழை பெய்த நேரத்தில், மின் விநியோக சீரமைப்புப் பணிகளை முடிக்க 2 வார காலமானது. கடந்த நவம்பா் மாதத்தில் கூட மழை நின்றும் 10 நாள்களுக்குப் பிறகே மின் விநியோகம் முழுமையாக கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு, மழைநின்ற உடனே பெரும்பாலானோருக்கு மின் விநியோகம் சீராக வழங்கப்படுகிறது.

இவ்வாறு தடையற்ற மின் விநியோகம் செய்வதற்காகவே, தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் ஊழியா்கள், 4 ஆயிரம் பொறியாளா்கள் என 40 ஆயிரம் போ் களப் பணியாற்றி வருகின்றனா்.

மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விநியோகத்தில் பெரியளவு பாதிப்பில்லை. திருச்சியில் மின் விபத்து ஏற்பட்டது. அதற்கான காரணத்தைக் கண்டறிந்து மீண்டும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளோம்.

இதுவரை பெறப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகாா்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகாா்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன.

மின் உற்பத்தி பாதிப்பைப் பொருத்தவரை, நிலக்கரி சேமிப்பு தளத்தில் மழைநீா் தேங்கியதால் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதுவும் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. எனவே மின் உற்பத்தியில் சிக்கலில்லை. மின்சாரமும் வெகு விரைவில் சீராக வழங்கப்படும் என அமைச்சா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com