சென்னையில் காஞ்சிபுரம் கோயில் ரூ.250 கோடி மதிப்பிலான இடம் மீட்பு
By DIN | Published On : 13th October 2021 04:05 AM | Last Updated : 13th October 2021 04:05 AM | அ+அ அ- |

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 250 கோடி மதிப்பிலான 39 கிரவுண்ட் இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து அறநிலையத்துறை செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளது.
இது குறித்து துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை பல்வேறு ஆக்கிரமிப்பாளர்கள் வாடகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். முறையாக வாடகை செலுத்தாத நபர்களிடமிருந்து இதுவரை 132 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
முதலில் 34 கிரவுண்ட் இடம் கடந்த ஜூன் 13-ஆம் தேதி சுவாதீனம் பெறபட்டது. இதையடுத்து ஜூலை 26-ஆம் தேதி சுமார் 1975 சதுர அடி கட்டடங்களுடன் கூடிய இடத்தை அபுபக்கர் என்பவரிடமிருந்து மீட்டு திருக்கோயிலுக்கு சொந்தமாக்கினோம். பின்னர் கடந்த செப். 29-ஆம் தேதி பாலசுப்பிரமணியன் என்பவரின் குடும்பத்தினரிடமிருந்து 49 கிவுண்ட் இடத்தை திருக்கோயில் வசம் மீட்டுள்ளோம். தற்போது ஏ.வி.எஸ். தாமஸ் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் 31 கிரவுண்ட் நிலம் மற்றும் ராவ் என்பவரிடமிருந்து 8 கிரவுண்ட் நிலம் என மொத்தம் 39 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 250 கோடி ஆகும்.
மீட்கப்பட்ட இடத்தை அப்படியே விட்டு விடாமல் திருக்கோயிலுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் திட்டம் வரைபடம் தயாரிக்கப்பட்டு முதல்வரின் ஒப்புதலுடன் பணிகள் தொடங்கப்படும். பக்தர்களின் குறைகளைக் களைவதற்காக குறைகள் பதிவேடு துறையைத் தொடங்கினோம். இணையதளம் மூலம் குறைகளை மக்கள் தெரிவிக்க கடினமாக இருந்ததால் தொலைபேசி எண்ணை அறிவித்து அதன் மூலம், இதுவரை 4,500 புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்களை மண்டல வாரியாக பிரித்து அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம்,
விஜயதசமி அன்று கோயில் திறப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும். திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பணிகள் முடிந்தவுடன் விரைவில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார் அவர்.