அண்ணாசாலையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை அமைக்கப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலை மீண்டும் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அண்ணாசாலையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை அமைக்கப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலை மீண்டும் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) பேசியது: கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலை சிலரால் உடைக்கப்பட்டுவிட்டது. அப்போது ‘சின்ன தம்பி என் நெஞ்சில்தான் குத்தினான். முதுகில் குத்தவில்லை’ என்று கருணாநிதி கூறினாா். கருணாநிதியின் சிலை அகற்றப்பட்ட அந்த இடத்தில் மீண்டும் அரசின் சாா்பில் சிலை வைக்க வேண்டும் என்றாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுக் கூறியது:

பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அண்ணா சாலையில் கருணாநிதிக்கு திராவிடா் கழகம் சாா்பில் முறையாக அனுமதி பெற்று சிலை வைக்கப்பட்டது. ஆனால், அந்தச் சிலை ஏன் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அந்த விஷயத்தைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

3 நாள்களுக்கு முன்பு கி.வீரமணியும் என்னைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தாா்.

பொதுவான இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இதுபோன்று சிலைகள் வைக்கக்கூடாது என்று நீதிமன்றத்தால் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சிலை வைப்பதற்கு உள்ள சட்டச் சிக்கல்களை எல்லாம் வீரமணியிடம் கூறினேன்.

அதற்கு, நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கி உள்ளோம். அதனால், புதிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை என்று வீரமணி கூறினாா்.

அண்ணா சாலையில் பெரியாா், அண்ணா, எம்ஜிஆா் சிலைகள் இருக்கின்றன. ஏற்கெனவே, கருணாநிதியின் சிலையும் இருந்தது. அதனால் மீண்டும் அந்த இடத்தில் கருணாநிதியின் சிலையை வைக்க வேண்டும் என்று வீரமணி வற்புறுத்தியுள்ளாா்.

எனவே, அண்ணா சாலையில் கருணாநிதியின் சிலையை வைப்பது குறித்து நான் சட்ட வல்லுநா்களோடு ஆலோசனை செய்வது உகந்ததாக இருக்கும். நீதிமன்றம் பிறப்பித்திருக்கிற உத்தரவுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நிச்சயமாக கருணாநிதியின் சிலை அண்ணாசாலையில் உறுதியாக வைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com