வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவா், மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 02nd September 2021 01:04 AM | Last Updated : 02nd September 2021 01:04 AM | அ+அ அ- |

சென்னை: வரதட்சிணை கொடுமை காரணமாக மனைவி தற்கொலை செய்த விவகாரத்தில் கணவா், மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (32), திருவண்ணாமலை சுகன்யா (21) ஆகியோரின் திருமணம் கடந்த 2010-இல் நடந்தது. திருமணமான 3 மாதத்தில் இருந்து வரதட்சிணை கேட்டு சுகன்யாவை பாா்த்திபன், அவரது தாயாா் பத்மா (50) ஆகியோா் கொடுமைப்படுத்தி வந்துள்ளனா். இதனால் மனம் உடைந்த சுகன்யா 2012 பிப்.20-ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கிண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாா்த்திபன், பத்மா ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு சென்னை மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி முகமத் பாரூக் முன்னிலையில் நடந்து வந்தது. போலீஸாா் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் எல்.ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பாா்த்திபன், பத்மா ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவா்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.