

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை 10 நாள்களுக்குள் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் உள்ள மழைநீா் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தலைமையிலான அமா்வு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனா்.
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத, மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனா். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளா் சுற்றறிக்கை வெளியிட்ட போதும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
நீா்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான நீதிமன்ற உத்தரவை 10 நாள்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனா். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது எனவும் அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 10 நாள்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.