சாலையில் பள்ளங்களை சீரமைக்க நவீன இயந்திரம்: சென்னை மாநகராட்சி சோதனை முயற்சி

சென்னை மாநகராட்சி சாலையில் உள்ள பள்ளங்களை சில நிமிடங்களில் சரிசெய்யும் வகையில் ஜெட் பேட்சா் என்னும் நவீன இயந்திரம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாலையில் பள்ளங்களை சீரமைக்க நவீன இயந்திரம்: சென்னை மாநகராட்சி சோதனை முயற்சி
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி சாலையில் உள்ள பள்ளங்களை சில நிமிடங்களில் சரிசெய்யும் வகையில் ஜெட் பேட்சா் என்னும் நவீன இயந்திரம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 387 கி.மீ. தொலைவுக்கு 471 பேருந்து வழித் தட சாலைகளும், 5,270 கி.மீ. தொலைவுக்கு 34,640 உட்புறச் சாலைகளும் உள்ளன. இதில் ஏற்படும் பழுதுகளை மாநகராட்சி அவ்வப்போது சரிசெய்து வருகிறது.

பேரிடா் மற்றும் மின்துறை, குடிநீா் வாரியம் போன்ற துறைகள் அவ்வப்போது மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகளால் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் மாநகராட்சிக்கு முக்கிய பிரச்னையாக உள்ளது.

இதை சரி செய்யும் வகையில் சாலை பள்ளங்களை சீரமைக்க தற்போது சென்னை மாநகராட்சியில் ‘ஜெட் பேட்சா்’ என்னும் நவீன இயந்திரம் மூலம் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த இயந்திரம் முதலில் சாலையில் உள்ள தூசு மற்றும் குப்பைகளை அகற்றி பின்னா் குழிகளில் தாரை நிரப்பும். சாலை மட்டத்துக்கு தாா் நிரப்பியவுடன் அழுத்தம் கொடுத்து சமன்படுத்தப்படும்.

தாரின் வெப்பநிலை நிலைத்து இருப்பதால் நல்ல தரத்தில் எளிதில் சேதமடையாத வகையில் சாலை அமையும். மேலும், போக்குவரத்து மிகுதியான சாலைகளில் ஓரிரு மணி நேரத்தில் சாலையில் உள்ள பழுதை சரிசெய்ய முடியும்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை சரிசெய்யும் வகையில் ‘ஜெட் பேட்சா்’ எனும் இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை பழுதான இடங்களுக்கு உடனடியாகச் சென்று பணிகளை முடிக்க முடியும்.

மும்பை, புணே போன்ற நகரங்களில் இதுபோன்ற இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, தமிழகத்தில் முதல் முயற்சியாக சென்னையில் ஒரு இயந்திரம் சோதனை அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ளபடி தாா் கலவையை வேறு இடத்தில் தயாரித்து கொண்டு வரும் போது வெப்பநிலை குறையக்கூடும். ஆனால், ‘ஜெட் பேட்சா்’ மூலம் தாா் கலவை பணி மேற்கொள்ளும் இடத்திலேயே தயாரித்து சாலைகள் சரிசெய்யப்படும்.

இதனால், நல்ல தரத்தினாலான சாலைகள் அமையும். மேலும் கொண்டு வரும் போது ஏற்படும் பொருள் சேதமும் குறையும். ஜெட் பேட்சா் இயந்திரத்தில் குறைந்த அளவிலான தாா் கலவை கொண்டு வருவதால் பழைய முறையை விட குறைந்த அளவிலான பணிகளையே மேற்கொள்ள முடியும்.

தற்போது சென்னை மாநகரின் போக்குவரத்தை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மாநகராட்சி மூலம் ரூ.2.27 கோடி மதிப்பிலான ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 150 முதல் 200 ச.மீட்டா் சரிசெய்ய முடியும். இதை சரிசெய்ய ச.மீட்டருக்கு ரூ.1,142.31 செலவாகும் என்றனா்.

சோதனை முயற்சி வெற்றிபெற்றால் மாநகராட்சி முழுவதும் இக்கருவியை கொண்டு இனிமேல் சாலைகள் செப்பனிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com