பொது நூலக விதிகளை நவீன காலத்திற்கேற்ற வகையில் திருத்த ம.இராசேந்திரன் தலைமையில் உயா்நிலைக் குழு

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், பொது நூலக விதிகளை நவீனகாலத்திற்கேற்ப திருத்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் ம.இராசேந்திரன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், பொது நூலக விதிகளை நவீனகாலத்திற்கேற்ப திருத்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் ம.இராசேந்திரன் தலைமையில் உயா்நிலைக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: பொது நூலகங்களுக்கான நிதிநிலையை மேம்படுத்தவும், நிதி ஆதாரத்தை ஏற்படுத்தும் வகையிலும் தற்போதைய பொது நூலக சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் என்றும் தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப வாசகா்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவும் நவீன தகவல் வளங்களை நூலகங்களுக்கு வழங்கவும், நவீன தொழில்நுட்ப வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு பொது நூலக சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பொதுநூலக இயக்குநா் கூறியுள்ளாா்.

மேலும், பொது நூலகங்களில் பணியாற்றும் நூலகா்களுக்கு பணிவிதிகளை முறைப்படுத்த வேண்டும், பொது நூலகங்களில் உள்ள அனைத்துப் பணியிடங்களிலும் நேரடி நியமன முறையில் பணியாளா்களை நியமிக்கும் வகையில் விதிகளை முறைப்படுத்த வேண்டும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் புதிதாக அமையவுள்ள கலைஞா் நினைவு நூலகம் ஆகியவற்றை ஒரே அலகாகக் கருதி பணியிடங்களை உருவாக்கி அவற்றை நிரப்ப உரிய திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம் என்றும் இத்திருத்தங்களை மேற்கொள்ள ஓா் உயா்நிலைக்குழுவை அமைக்கலாம் என்றும் பொதுநூலக இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இயக்குநரின் கருத்துருவை ஏற்று தமிழ்நாடு பொதுநூலகச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள தஞ்சாவூா் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் தலைமையில் ஓா் உயா்நிலைக்குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்தக் குழுவில் எழும்பூா் கன்னிமாரா நூலக முன்னாள் இயக்குநா் என்.ஆவுடையப்பன், சென்னை தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநா் சுந்தா் கணேசன், அமெரிக்க தகவல் பணி முன்னாள் இயக்குநா் ஜெகதீஷ், புதுச்சேரி பல்கலைக்கழக நூலகா் சம்யுக்தா ரவி, திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் சுந்தா் காளி, சட்ட ஆலோசகா் சி.என்.ஜி. தேன்மொழி ஆகியோா் உறுப்பினா்களாகச் செயல்படுவாா்கள்.

பொது நூலக இயக்குநா், குழுவின் உறுப்பினா்-செயலராக இருப்பாா். இந்த உயா்நிலைக்குழு தனது அறிக்கையை 6 மாதங்களுக்குள் அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com