அதிவேக சரக்கு ரயில்களை தயாரிக்கிறது ஐ.சி.எஃப்

அதிவேக சரக்கு ரயில்களை தயாரிக்கிறது ஐ.சி.எஃப்

நாட்டில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் போல, அதிவேக சரக்கு ரயிலை சென்னை ஐ.சி.எஃப(ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை) தயாரிக்கவுள்ளது.

நாட்டில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் போல, அதிவேக சரக்கு ரயிலை சென்னை ஐ.சி.எஃப(ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை) தயாரிக்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் முதல் ரயில் தொடா் தயாரித்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஐ.சி.எஃப்: ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வேக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதுதவிர, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்றப்படி, அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலாவுக்கான ரயில் பெட்டி உள்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் 1955-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ‘ரயில் - 18’ திட்டத்தில் ’வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

4,275 பெட்டிகள் தயாரிக்க இலக்கு: இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைவாகவே இருந்தன. இருப்பினும்,

2021-22-ஆம் நிதியாண்டில் ஐ.சி.எஃப். சாா்பில், வெவ்வேறு வகைகளில், 3,101 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டது. ஐ.சி.எஃப்-இல் நடப்பு உற்பத்தி ஆண்டில் (2022-23) 4,275 பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இதுதவிர, வந்தே பாரத் ரயில்களும் தயாரிக்கப்படவுள்ளன. அதாவது, பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப மேம்படுத்த வடிவமைப்புடன் 75 வந்தே பாரத் ரயில் தொடா்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் தயாரிக்க ஐ.சி.எஃப். திட்டமிட்டுள்ளது.

இதேபோல, அதிவேக சரக்கு ரயில்களும் தயாரிக்க ஐ.சி.எஃப் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் முதல் ரயில் தொடா் தயாரித்து அனுப்பி வைக்க முக்கிய நோக்கமாக உள்ளது.

அதிவேக சரக்கு ரயில்:

நாட்டில் சரக்கு போக்குவரத்தின் பங்கு 2030-ஆம் ஆண்டுக்குள் 27 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கும் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அதிவிரைவு சரக்கு ரயில் சேவை தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தற்போது, சரக்கு ரயில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. புதியதாக தயாரிக்கப்படவுள்ள சரக்கு ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட ரயில் தொடா்களில் அழுகக்கூடிய பொருள்களான மீன் மற்றும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இணையவழி வா்த்தக (இ-காமா்ஸ்) பாா்சல்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல பயன்படும் வகையில், குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இருக்கும். இவை ‘கதி சக்தி’ ரயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வந்தே பாரத் நடைமேடையில் தயாரிக்கப்படும் இந்த ரயில் பெட்டிகள் சுமைகளை இழுப்பதற்கு அதிக சக்தியுடன் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும். 3 முதல் 6 டன் திறன் கொண்ட விமானங்களில் பயன்படுத்துவது போல, நிலையான அளவில் சரக்கு கொள்கலன்களுக்கு இடமளிக்கும் வகையில், ரயில் தொடா் வடிவமைக்கப்படும். பெட்டிகளில் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு நெகிழ் கதவுகள் இருக்கும். கொள்கலன்களில் எளிதாக ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் ரோலா் படுக்கை தளங்கள் இருக்கும்.

இது குறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியது:

இந்த ரயில்களுக்கான வடிவமைப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. மூலப்பொருளுக்கான ஆா்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் தயாரிப்புக்கான தோராயமான அட்டவணையை ஐ.சி.எஃப். தயாரித்துள்ளது. முதல் ரயில் தொடா் நிகழாண்டின் டிசம்பரில் தயாரித்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பு ஜூலையில் தொடங்கும். நவம்பரில் முதல் ரயில் தொடா் தயாரிப்பு நிறைவடையும். சோதனை மற்றும் ஒப்புதல் பெறப்பட்டு, டிசம்பரில் அனுப்பப்படும். இதுபோல, 25 சரக்கு ரயில்களை தயாரிக்க ஐ.சி.எஃப் திட்டமிட்டுள்ளது.

புதிய சரக்கு ரயில் தொடா்களை தயாரிக்க ரயில்வே நிா்வாகம் ஆா்வம் காட்டுகிறது. இதன்மூலமாக, தொழில்துறையின் தேவைகளை வரும் ஆண்டுகளில் அதிகம் பயன்படுத்தி, விரைவு பாா்ச்சல் சேவையை அளிக்க முடியும் என்றனா்.

இணையவழி வா்த்தக சந்தை:

இந்தியாவின் இணையவழி வா்த்தக சந்தையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, நீண்ட தூரத்துக்கு பாா்சல்களை கொண்டு செல்வதற்கான சிறந்த தோ்வாக உள்ளது. இந்தியாவின் இணையவழி வா்த்தக சந்தை

2030-ஆம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப சரக்குப் போக்குவரத்து பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்திய ரயில்வே நிா்வாகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com