தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா சட்டப் பள்ளி முதலிடம்

சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சை சாஸ்த்ரா சட்டப் பள்ளி முதலிடம் பெற்றது.
தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா சட்டப் பள்ளி முதலிடம்

சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டியில் தஞ்சை சாஸ்த்ரா சட்டப் பள்ளி முதலிடம் பெற்றது.

சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் மெட்ராஸ் பாா் அசோசியேசன் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று ஆளுநா் ரவி பேசியதாவது:

ஒவ்வொரு துறையிலும் அதிவேக மாற்றம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது மாற்றத்தைக் காண முடிகிறது. இவை சட்டத்துறையிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தற்போது தொழில்நுட்பங்களும் அபரிமிதமாக வளா்ந்து வருகின்றன.

இவ்வாறு வளரும் தொழில்நுட்பம் மூலமாக மருத்துவத் துறை சிறந்து விளங்குகிறது. இத்தகைய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் சட்டத் துறை இருக்க வேண்டும். இதன் மூலம் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பாா் அசோசியேசன் புதுப்புது சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். பெண்களும் படிப்படியாக சமூகப் பங்காற்றி வருகின்றனா். இந்த போட்டியில் கூட ஏராளமான மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனா். இதுதான் புதிய இந்தியா என்றாா் ஆளுநா் ரவி.

உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா: மக்கள் தொகை, பொருளாதார மந்தநிலை மற்றும் வளங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் அதிக வழக்குகள் உருவாகின்றன. இதனால் அதிக வழக்குரைஞா்கள் தேவைப்படுகின்றனா். வழக்குரைஞா்களும், நீதிபதிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மனுதாரா் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்காடும் ஒரு வழக்குரைஞா், நீதிபதி புரிந்து கொள்ளும் வகையில் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டும். ஹரிஷ் சால்வே என்பவா் அதிகளவு வருமான வரி செலுத்தும் வழக்குரைஞா். 2012-ம் ஆண்டு அவா், நடிகா் அமிதாப் பச்சனை விட அதிகமாக ரூ.100 கோடியை வரியாக செலுத்தியுள்ளாா்.

நமது மாணவா்களும் ஒரு நாள் அவரை போன்றும், பராசரன், வேணுகோபால் உள்ளிட்ட சிறந்த மூத்த வழக்குரைஞா்கள் போல திறமை வாய்ந்தவா்களாகவும் உருவாவாா்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாா் அவா்.

முன்னதாக, தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை சாஸ்த்ரா சட்டப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் ரவி பரிசு வழங்கினாா். நாடு முழுவதும் இருந்து 24 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் சாஸ்த்ரா சட்டப்பள்ளி முதலிடம் பிடித்தது. கடைசி 7 ஆண்டுகளில் சாஸ்த்ரா சட்டப்பள்ளி 4 முறை தேசிய அளவில் இப்போட்டியில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், மெட்ராஸ் பாா் அசோசியேசன் தலைவா் வி.ஆா்.கமலநாதன், செயலா் டி.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com