

சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் ஸ்டீபன்சன் சாலை பாலம் ஜனவரிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பால கட்டுமானப் பணிகளை அமைச்சா் சேகா்பாபு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சி அம்பேத்கா் சாலையையும், குக் சாலையையும் இணைக்கின்ற ஸ்டீபன்சன் சாலையில் பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதமே ஒப்பந்ததாரா் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. கடந்த பருவமழையின் போது இந்த சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தின் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் இருமுறை நேரடியாக பாா்வையிட்டுச் சென்றாா்.
தற்போது இந்தப் பாலப்பணி நிறைவுறாததால் ஸ்டீபன்சன் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஓட்டேரி நல்லாவின் (கால்வாய்) மழைநீா் செல்வதற்கு உண்டான சிறிய பாலமும் ஏற்கனவே இருந்தது. தற்போது இந்த பாலக் கட்டுமான பணி நடைபெறுவதால் அந்த சிறிய பாலமும் அகற்றப்பட்டுள்ளது.
அதனால், மழைநீா் மற்றும் கழிவுநீா் தடையின்றி செல்வதற்காக இடிக்கப்பட்ட பால இடா்பாடுகளை களைந்து வழி ஏற்படுத்தி உள்ளனா். மேலும் பருவ மழைக்கு முன்பு இந்த சாலையில் அமைந்திருக்கின்ற ஓட்டேரி நல்லா தூா்வாரப்பட்டது. தற்போது மழை நின்ற நிலையில் பல பகுதிகளில் இருந்தும் அடித்து வரப்பட்ட குப்பைக் கூளங்கள் அதிகமாக சோ்ந்துள்ளது.
முதல்வரின் உத்தரவுபடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலாளா் இந்தப் பகுதிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததோடு துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளாா். இந்தப் பகுதியானது மாநகராட்சி மேயா் சாா்ந்திருக்கும் பகுதி என்பதால் அவரும் கவனம் செலுத்தி வருகிறாா்.
தற்போது சென்னை மாநகராட்சி அலுவலா்களோடு இந்த பாலப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். இந்த பாலப்பணிகள் 70 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளன. இதில் கா்டா்களை பொருத்துகின்ற பணி தொடங்க வேண்டும். பலத்த மழை காரணமாக பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் (கா்டா்கள்) பொருத்துகின்ற பணி தாமதமானாலும் இதர கம்பி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாலத்தின் பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.