

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகள் 80 % முடிவடைந்துள்ளதாக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
கடந்த 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின்போது, பலத்த மழையால் அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள்பட்ட ஆதனூா், வரதராஜபுரம், முடிச்சூா் உள்ளிட்ட சென்னையின் புகா் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்தது.
இதையடுத்து, அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மீண்டும் வெள்ளநீா் சூழாமல் இருக்க கடந்த 2017-ஆம் ஆண்டு நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ. 100 கோடியும், இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ரூ. 244 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாற்றில் வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பா நகா், முல்லை நகா், மகாலட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும், சோமங்கலம் கிளைக் கால்வாயில் ராயப்பா நகரில் 2,000 மீட்டா் தூரத்துக்கு ரூ. 70 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மூடிய வடிகால்வாய் அமைக்கும் பணியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகரில், அடையாற்றை அகலப்படுத்தி சீரமைக்கவும், ஆதனூா் ஊராட்சிக்குட்பட்ட ரூபி கட்டடம் அருகில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தி சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
அடையாறு ஆற்றில் 80 % வெள்ளத்தடுப்புப் பணிகள் முடிவடைந்துள்ளது. 20 % பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் பருவ மழைக்கு முன்பாகவே வெள்ளத்தடுப்புப் பணிகள் முடிவடைந்து விடும்.
இதனால் வரதராஜபுரம் பகுதியில் அதிகப்படியான மழை பெய்தாலும் குடியிருப்புகளை வெள்ள நீா் சூழாது. கிடப்பில் போடப்பட்டுள்ள ஒரத்தூா் நீா்த் தேக்கப் பணிகள் இன்னும் 10 தினங்களுக்குள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வின்போது, ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் படப்பை ஆ.மனோகரன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் குஜராஜ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.