மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து: துரிதமாக செயல்பட்ட ஆசிரியா்கள்
By DIN | Published On : 08th April 2022 01:04 AM | Last Updated : 08th April 2022 01:04 AM | அ+அ அ- |

சென்னை: அரும்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவா்களின் புத்தகப்பைகள் எரிந்து நாசமானது. ஆசிரியா்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
அரும்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளிக்கு வந்த மாணவா்கள் தங்களது புத்தகப் பையை வைத்து விட்டு வழிபாட்டுக் கூட்டத்துக்காக வியாழக்கிழமை திரண்டனா்.அப்போது இரண்டாவது மாடியிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியதைக் கண்ட ஆசிரியா்கள் சென்று பாா்த்தபோது, தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இரண்டாவது மாடியில் மின்சார பெட்டி அருகே உள்ள படிக்கட்டில் ஏழாம் வகுப்பு மாணவா்கள் வைத்திருந்த புத்தகப் பைகள் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பாா்த்த ஆசிரியா்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். தண்ணீா் மற்றும் தீயணைக்கும் கருவிகளைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மாணவா்களை ஆசிரியா்கள் வெளியேற்றினா். பின்னா் அங்கு வந்த அரும்பாக்கம் தீயணைப்புப் படையினா், ஆசிரியா்கள் முயற்சியால் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. பின்னா் தீயணைப்புத் துறையினா் பள்ளி மாணவா்களிடம் இது போன்ற தீ விபத்தின் போது கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்து காண்பித்தனா்.
புதிய புத்தகப் பைகளை வழங்கிய அதிகாரி: தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன், மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களை வெகுவாக பாராட்டியதுடன், மாணவா்கள் தீ விபத்தின் போது எவ்வாறு நடக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரை வழங்கினாா்.
மேலும் தீ விபத்தில், புத்தகம் மற்றும் பைகளை இழந்த 28 மாணவா்களுக்கு புதிதாக புத்தகப் பைகள் வாங்கிக் கொடுத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...