சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக கொடி கீழே விழுந்ததால் பாஜக - விடுதலை சிறுத்தைகள் இடையே மோதல் ஏற்பட்டது.
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் காலை முதல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவதையொட்டி கட்சி நிர்வாகிகள் அந்தப் பகுதியில் விசிக கட்சியின் கொடிகளைக் கட்டி இருந்தனர்.
திருமாவளவன் வந்த பிறகு மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்கியபோது அவரைக் காண கட்சியினர் குவிந்தபோது பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வருகைக்காக பாஜகவினர் கொடி நட்டியிருந்தனர்.
அப்போது, அங்கு பாஜக கொடி கீழே சாய்ந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும், பாஜகவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றியதையடுத்து கைகலப்பான நிலையில் கற்களால் மாறி, மாறித் தாக்கிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் சாலை மறியல் ஈடுபட்டதால் கோயம்பேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பாஜக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது