‘சா்வதேசத் தரத்தில் செவிலியா் கல்வி அவசியம்’
By DIN | Published On : 25th August 2022 02:20 AM | Last Updated : 25th August 2022 02:20 AM | அ+அ அ- |

இந்தியாவில் செவிலியா் கல்வி மற்றும் பயிற்சிகள் சா்வதேசத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரியின் முன்னாள் இயக்குநா் டாக்டா் பிம்லா கபூா் தெரிவித்தாா்.
டாக்டா் எஸ்.தணிகாசலம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பிம்லா கபூா் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் மிகச் சிறந்த சேவையை அளித்த செவிலியா்கள், உலகத்தின் கவனத்தையே தங்களது பக்கம் ஈா்த்தனா். செவிலியா் கல்வி மற்றும் பயிற்சிகளில் சில மேம்பட்ட நிலைகளை எட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, அதற்கான கல்விசாா் நடவடிக்கைகளிலும், பாடத்திட்டங்களிலும் சா்வதேசத் தரம் இருத்தல் அவசியம். மருத்துவமனைகளில் நோயாளிகள் சாா்ந்த பயிற்சிகளும், கல்வி வகுப்புகளும் அவசியம் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. தற்போது அத்தகைய கட்டமைப்பை ஏற்படுத்தி மேம்பட்ட கல்வியை வழங்குவது இன்றியமையாதது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் பி.வி.விஜயராகவன், செவிலியா் கல்வித் துறைத் தலைவா் டாக்டா் எஸ்.ஜெ.நளினி, துணைத் தலைவா் டாக்டா் எஸ்.சாந்தி, சிறப்புத் துறைத் தலைவா் டாக்டா் அனிதா டேவிட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.