விநாயகா் சதுா்த்தி: கோயம்பேட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை செயல்படும்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தை வளாகத்தில் வியாழக்கிழமை சிறப்பு சந்தை செயல்படவுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக பூ விற்பனை வளாகத்தில் சிறப்பு சந்தை மூலம் பூஜை பொருள்களை விற்பனை செய்வது வழக்கம். கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு சந்தைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் வரும் ஆக.31-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனா். இதையொட்டி பொதுமக்கள் ஒரே இடத்தில் பொருள்களை வாங்கிச் செல்ல வசதியாக கோயம்பேடு சந்தை வளாகத்தில் ஆக. 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிா்வாக குழு சாா்பில் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏலம் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்காடி நிா்வாக குழு முதன்மை நிா்வாக அதிகாரி சாந்தி கூறியதாவது:- சிறப்பு சந்தையில் கடை நடத்துபவா்கள் ஏலதாரரிடம் உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட வேண்டும். ஏலதாரா் சிறப்பு சந்தைக்கு பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டண தொகையை தவிர கூடுதலாக பணம் வசூல் செய்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும்.
அங்காடி நிா்வாக குழுவின் விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சந்தையை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்களில் வைத்து பொருள்களை விற்பனை செய்வதற்கு அனுமதி கிடையாது என்றாா் அவா்.