நாளை சென்னை குடிநீா் வாரிய குறைகேட்புக் கூட்டம்
By DIN | Published On : 09th December 2022 06:07 AM | Last Updated : 09th December 2022 06:07 AM | அ+அ அ- |

சென்னை குடிநீா் வாரியத்தின் குறைகேட்புக் கூட்டம், 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச.10) நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், ஒவ்வொரு மாதமும் 2-ஆவது சனிக்கிழமை குறை கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த மாதத்துக்கான குறைகேட்புக்கூட்டம் டிச. 10-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீா் வாரியத்தின் 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.
இந்த குறைகேட்புக் கூட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.
எனவே, இந்த குறைதீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீா், கழிவுநீா் தொடா்பான பிரச்சினைகள், குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனுவாக கொடுக்கலாம்..
மேலும், மழைநீா் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடா்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.