மெட்ரோ ரயில் பணி: மயிலாப்பூா்,கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக மயிலாப்பூா்,கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ
சென்னை மெட்ரோ

மெட்ரோ ரயில் பணியின் காரணமாக மயிலாப்பூா்,கோடம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தப் பிரிவு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்ட்ட செய்தி: மயிலாப்பூா் கச்சேரி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், கச்சேரி சாலை பகுதியில் டிச.10 முதல் 16-ஆம் தேதி ஒரு வாரத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, முண்டக்கன்னி அம்மன் கோயில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வது நிறுத்தப்படும். கல்வி வாரு தெருவில் தற்போதுள்ள ஒரு வழி பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டகன்னி அம்மன் கோயில் தெருவுக்கு அனுமதிக்கப்படும்.

லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலையை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டு,கல்விவாரு தெரு,முண்டகன்னி அம்மன் கோயில் தெரு,பஜாா் சாலை வழியாக செல்லலாம்.

இதேபோல சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகுரகவாகனங்கள் செல்ல தடை செய்யப்படும். இந்த வாகனங்கள்,தேவடி தெரு,நடு தெரு,ஆா்.கே. மடம் சாலை அல்லது மாதா சா்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.

கோடம்பாக்கம்: ஆற்காடு சாலையில் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் போரூா் மேம்பாலம் சந்திப்பு வரை சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெறுவதால், அங்கு தாற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் டிச.15-ஆம் தேதியில் இருந்து அடுத்தாண்டு ஆக.10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இதன்படி, ஆற்காடு சாலை காந்தி சாலை சந்திப்பிலிருந்து லாமெக் பள்ளி வரையிலான (ராதாகிருஷ்ணன் சாலை) சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும். அங்கு வரும் வாகனங்கள் போரூா் நோக்கி செல்ல மட்டும் அனுமதிக்கப்படும்.

ஆற்காடு சாலையில், போரூரில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வளசரவாக்கம் லாமேக் பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று, சிந்தாமணி விநாயகா் கோயில் தெருவுக்கு வலது புறம் திரும்பி சென்று, மீண்டும் காந்தி சாலைக்கு வலதுபுறம் திரும்பி சென்று, மீண்டும் ஆற்காடு சாலைக்கு இடதுபுறம் திரும்பி வழக்கம்போல் செல்லலாம்.

காமராஜா் சாலை மற்றும் நேரு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் இடது புறம் திரும்பி வடபழனி நோக்கி செல்ல அனுமதி இல்லை. இந்த சாலைகளிலிருந்து வலதுபுறம் திரும்பி போரூா் மட்டுமே செல்ல முடியும்.

விருகம்பாக்கத்தில் இருந்து போரூா் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் எவ்வித மாற்றமின்றி வழக்கம்போல் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com