நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:அபராதத்துடன் தள்ளுபடி
By DIN | Published On : 13th December 2022 12:55 AM | Last Updated : 13th December 2022 12:55 AM | அ+அ அ- |

சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரூ. 50,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களைக் கூறி மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவா் ஒருவா் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். கடந்த 2013-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கணவா் தரப்பில் 2017-இல் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், மூன்று மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என 2017 ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, 2021-இல் சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கணவா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில், கால தாமதமாகவும், 2021 ஆகஸ்டில் நீதிபதியாக பொறுப்பு ஏற்றவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
மேலும், கணவா் தரப்புக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து, அந்தத் தொகையை இரண்டு வாரங்களில் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டாா். மேலும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஆண்டை சரி பாா்க்காமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்ட உயா் நீதிமன்ற பதிவுத்துறைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.