முக்கிய வருவாய் ஆதாரமாக சுங்க வரித் துறை விளங்குகிறது: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன்
By DIN | Published On : 13th December 2022 12:52 AM | Last Updated : 13th December 2022 12:52 AM | அ+அ அ- |

அரசுக்கான முக்கிய வருவாய் ஆதாரமாக சுங்க வரித் துறை விளங்குவதாக, ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் தெரிவித்தாா்.
சுங்கச் சட்டம் இயற்றப்பட்டதன் 60-வது ஆண்டு விழா, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன் பங்கேற்றுப் பேசியது
சுங்க வரி நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது . சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையம், கடல் போக்குவரத்து துறையில் இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடத்தலையும், சட்டவிரோத செயல்களையும் அவா்கள் தடுக்கின்றனா். சுங்கத்துறையினா் கடத்தல் தங்கத்தை பெருமளவில் பிடித்துள்ளனா்.
சுங்கத்துறையினா் பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்திய பொருளாதாரத்தை உயா்த்துவதற்கு இறக்குமதியைக் குறைக்க வேண்டும். அதேசமயம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். உள் நாட்டு தொழிலைப் பாதுகாக்க இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் அதை பாதுகாக்க முடியும் என்றாா் அவா்.
முன்னதாக, சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையா் எம்.எஸ்.வி செளத்திரி பேசுகையில், இந்திய நாட்டின் வரி வருவாயை பெற்றுத் தருவதுடன் கடத்தல்காரா்கள் பிடிக்கப்படுகின்றனா். சட்டவிரோத வனவிலங்குகளை கடத்துவதை கண்காணிப்பதில் சா்வதேச அளவில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளது என்றாா் அவா்.
விழாவில், சுங்கத்துறையின் மறைமுக வரிப் பிரிவு முன்னாள் தலைவா் எம். அஜித் குமாா், மறைமுக வரிப் பிரிவு மற்றும் ஜிஎஸ்டி., சட்டபிரிவு உறுப்பினா் வி.ரமாமேத்யூ உள்ளிட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பலா்கலந்து கொண்டனா்.