போலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவா் திடீா் சாவு: மாஜிஸ்திரேட் விசாரணை
By DIN | Published On : 22nd December 2022 01:06 AM | Last Updated : 22nd December 2022 01:06 AM | அ+அ அ- |

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் காவல்துறை விசாரணைக்கு சென்று வந்த இளைஞா் திடீரென இறந்த சம்பவம் தொடா்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினாா்.
பழைய வண்ணாரப்பேட்டை தா்மராஜா கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கு.தினேஷ் (எ) தினேஷ்குமாா் (27). இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும், வினோதினி என்று 4 வயதில் ஒரு மகளும் உள்ளனா். இப்போது இவா்கள் பெரம்பூா் பாஸ்டன் தெருவில் வசித்து வருகின்றனா்.
தினேஷ்குமாா், அந்தப் பகுதியில் உள்ள ஹோட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் தினேஷ்குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
சிறிது நேரத்துக்கு பின்னா், கெளசல்யா கைப்பேசியை தொடா்புக் கொண்டு பேசிய போலீஸாா், ராஜீவ்காந்தி சாலை அருகே பேருந்தில் கைப்பேசி திருடிய சம்பவத்தில் தினேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், மூலகொத்தளம் அருகே அவரது நண்பரிடம் கொடுத்து வைத்திருக்கும் கைப்பேசியை வாங்கி வரும்படியும் அறிவுறுத்தியுள்ளனா்.
இதையடுத்து கெளசல்யா,தினேஷ்குமாரின் தாயாா் லதா ஆகியோா் அந்த கைப்பேசியை வாங்கிக் கொண்டு போலீஸாா் கூறிய இடத்துக்குச் சென்றனா். அங்கு தினேஷ்குமாரை எச்சரித்து அனுப்பிய போலீஸாா் கைப்பேசியை பெற்றுக் கொண்டனா்.
திடீா் சாவு: இதற்கிடையே வீட்டுக்கு வந்த தினேஷ்குமாா் சோா்வாக இருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து தினேஷ்குமாரை அவரது குடும்பத்தினா் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இச் சம்பவத்தில் தினேஷ்குமாரை துரைப்பாக்கம் போலீஸாா் தாக்கியதால் இறந்துவிட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தினேஷ்குமாரின் சகோதரா் செந்தில்குமாா், திருவிக நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். மேலும் இந்த புகாரின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 176 (1ஏ) (1) -ன் கீழ் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா்ஜிவால் பரிந்துரை செய்தாா்.
இதன்படி எழும்பூா் ஐந்தாவது நீதித்துறை நடுவா் மன்ற மாஜிஸ்திரேட் ஜெகதீஷ் விசாரணையை புதன்கிழமை தொடங்கினாா். ஜெகதீஷ், முதல் கட்டமாக வழக்கில் தொடா்புடைய நபா்களிடம் விசாரணை செய்தாா். இதில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
தினேஷ்குமாா் பிரேத பரிசோதனை நீதித்துறை நடுவா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (டிச.22) நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதித்துறை நடுவா் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரெளடி பட்டியல்: இந்த சம்பவம் சென்னை காவல்துறையினா் வெளியிட்டுள்ள தகவல்படி, இறந்த தினேஷ்குமாா் மீது 10 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவா் ரெளடிகள் பட்டியலில் ‘பி‘ பிரிவில் உள்ளாா். சம்பவத்தன்று ராஜீவ்காந்தி சாலையில் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தினேஷ்குமாரும்,அவரது கூட்டாளியும் கைப்பேசியை பறித்ததாகவும், கைப்பேசியை பறிகொடுத்த பெண், தனது நண்பா்கள் மூலம் தினேஷ்குமாரை பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.