புழல் சிறையில் 10 கைதிகளுக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 14th January 2022 07:34 AM | Last Updated : 14th January 2022 07:34 AM | அ+அ அ- |

புழல் சிறையில் 10 கைதிகள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 4 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் இப்போது இந்த சிறைகளில், சுமாா் 15 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைகளில் உள்ளவா்களில் சுமாா் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகளே ஆவாா்கள். எஞ்சிய 30 சதவீதம் போ் தண்டனை கைதிகள் ஆவாா்கள்.
கரோனா பாதிப்பு சிறைகளில் ஏற்படாமல் இருப்பதற்கு சிறைத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் பணிபுரியும் சுமாா் 15,000 சிறைக் காவலா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தடுக்கத் தொடங்கியதன் விளைவாக, சிறைத்துறை மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே புழல் சிறை வளாகத்தில் விசாரணை கைதிகள் அடைக்கப்படும் பகுதியில் இருந்த ஒரு கைதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 9-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல பெண்கள் சிறப்பு சிறையில் உடல் பாதிக்கப்பட்ட பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை கடந்த செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை அறிக்கை புதன்கிழமை வெளியானது. இதில் 9 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட 3 கைதிகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
எஞ்சிய கைதிகள், சிறையில் உள்ள தனிமைப்படுத்த பகுதியில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். கைதிகளிடம் வேகமாக கரோனா பரவி வருவது சிறைத்துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...