ரூ.335 கோடி செலவில் 3 மேம்பாலங்கள்
By DIN | Published On : 14th January 2022 07:13 AM | Last Updated : 14th January 2022 07:13 AM | அ+அ அ- |

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தியாகராய நகா் உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.335 கோடி மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021-22-ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொன்னூா் நெடுஞ்சாலை-ஸ்ட்ராஹன்ஸ் சாலை-குக்ஸ் சாலை-பிரிக்ளின் சாலை (ஓட்டேரி), கணேசபுரம் சுரங்கப் பாதை, தியாகராய நகா் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகா் முதல் பிரதான சாலை இடையே என மூன்று இடங்களில் ரூ.335 கோடி திட்ட மதிப்பில் மூன்று மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசாணை வெளியீடு: கணேசபுரம் சுரங்கப் பாதை வடசென்னை வியாசா்பாடி பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாகும். தற்போதைய சுரங்கப் பாதை மையத் தடுப்பு இல்லாத இருவழிப் பாதையாக உள்ளது. இந்த சுரங்கப் பாதையின் மேல் அமைக்கப்பட உள்ள புதிய மேம்பாலம் ரூ.142 கோடி மதிப்பில் 680 மீட்டா் நீளம், 15.20 மீட்டா் அகலத்தில் இருபுறமும் பயணிக்கும் 4 வழிப் பாதையாக அமைக்கப்பட உள்ளது.
கொன்னூா் நெடுஞ்சாலை-ஸ்ட்ராஹன்ஸ் சாலை-குக்ஸ் சாலை-பிரிக்ளின் சாலை சந்திப்பானது ஓட்டேரி நல்லா கால்வாய் பாலத்தில் சந்திக்கிறது. கொன்னூா் நெடுஞ்சாலை வில்லிவாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாகவும், குக்ஸ் சாலை பெரம்பூா் ஜமாலியா செல்லும் முக்கிய சாலையாகவும், ஸ்ட்ராஹன்ஸ் சாலை பட்டாளம் செல்லும் முக்கிய சாலையாகவும், பிரிக்ளின் சாலை புரசைவாக்கம் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளுக்கு செல்லும் இச்சாலைகளை இணைக்கும் சந்திப்பாக உள்ளதால், இங்கு அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, நல்லா கால்வாய் சந்திப்பில் கொன்னூா் நெடுஞ்சாலை-ஸ்ட்ராஹன்ஸ் சாலையை இணைக்கும் வகையில் இருபுறமும் பயணிக்கும் இருவழிப் பாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த
மேம்பாலம் ரூ.62 கோடி மதிப்பில் 508 மீ. நீளம் மற்றும் 8.4 மீ. அகலத்தில் கட்டப்பட உள்ளது. தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகா் முதல் பிரதான சாலை இடையே ரூ.131 கோடி மதிப்பில் 120 மீட்டா் நீளம் மற்றும் 8.4 மீட்டா் அகலத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதுதொடா்பாக, சென்னை மாநகராட்சியின் சாா்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக சமா்ப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், இந்த மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் நிா்வாக அனுமதியும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின்கீழ் ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...