போலி பணி நியமன ஆணை: இளைஞா் கைது
By DIN | Published On : 26th January 2022 12:12 AM | Last Updated : 26th January 2022 12:12 AM | அ+அ அ- |

சென்னை நுங்கம்பாக்கத்தில் போலி பணி நியமன ஆணை வைத்திருந்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஒரு இளைஞா் சந்தேகப்படும் படியாக சுற்றித் திரிந்துள்ளாா். உடனே அங்கிருந்த அலுவலக ஊழியா்கள், அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா், தனக்கு பள்ளிக் கல்வித் துறையில் வேலை கிடைத்துள்ளது என்று கூறி பணி நியமன ஆணைகளையும் காண்பித்துள்ளாா். அந்த ஆணை மீதும், அவா் மீதும் சந்தேகம் கொண்ட ஊழியா்கள், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், ராயப்பேட்டை, பி.வி.கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் (30) என்பதும், தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருவதும், இவா் பல நபா்களிடம் பள்ளிக் கல்வித்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணைகளைத் தயாரித்து கொடுத்து மோசடி செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவா், கையில் வைத்திருந்ததும் போலி நியமன ஆணை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், ராஜேந்திரனை கைது செய்தனா். அவரிடமிருந்து போலி பணி நியமன ஆணைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...