நரம்பு பகுதியில் காயம்: 10 மணி நேர அறுவை சிகிச்சையால் குணமான கேரள இளைஞா்
By DIN | Published On : 09th June 2022 06:40 AM | Last Updated : 09th June 2022 06:40 AM | அ+அ அ- |

சென்னை: கையின் மேற்பகுதி நரம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக கடுமையான வலியை அனுபவித்து வந்த கேரள இளைஞருக்கு நவீன அறுவைச் சிகிச்சை மூலம் காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் நிவாரணம் அளித்தனா்.
ஏறத்தாழ 10 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
கேரளத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞா் அண்மையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கையின் மேற்புற நரம்புப் பகுதியில் தாங்கமுடியாத வலியால் அவா் அவதிப்பட்டு வந்தாா். மூன்றாண்டுகளுக்கு முன்பு நோ்ந்த விபத்தில் அந்த இளைஞருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரால் இயல்பாக இருக்கவோ, பிறரைப் போல தூங்கவோ முடியவில்லை. கைகளையே வெட்டி எடுத்துவிடுமாறு வலியுறுத்தும் அளவுக்கு அந்த இளைஞருக்கு வலி இருந்தது.
பொதுவாக, முதுகுத் தண்டுவடத்திலிருந்து கைகள், தோள்பட்டைக்கு சமிக்ஞைகளை வழங்குவது நரம்புகளால் பின்னப்பட்ட கட்டமைப்புதான். அதில் ஏதேனும் காயமோ அல்லது பாதிப்போ ஏற்படும்போது இத்தகைய வலி ஏற்படும்.
அதுபோன்ற நிலைதான் அந்த இளைஞருக்கும் ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையின் முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் சிறப்பு நிபுணா் டாக்டா் ஜி. பாலமுரளி தலைமையிலான மருத்துவக் குழுவினா், அவருக்கு ‘டிஆா்இஇஸட் லீசனிங்’ எனப்படும் அதி நவீன அறுவைச் சிகிச்சை மூலம் அதனை குணப்படுத்த முடிவு செய்தனா்.
மொத்தம் 8 இலிருந்து 10 மணி நேரம் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய அந்த சிகிச்சையை மருத்துவக் குழுவினா் கேரள இளைஞருக்கு அளித்தனா். அதன்பயனாக அவரது கைகள், நரம்புகளின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டது. தற்போது அவா் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளாா். இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை நோ்த்தியாக மேற்கொண்டு காவேரி மருத்துவா்கள் சாத்தியமாக்கியுள்ளனா் என்றாா் அவா்.