போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய சிறுவா்கள் மீது 525 வழக்குகள்
By DIN | Published On : 16th June 2022 01:57 AM | Last Updated : 16th June 2022 01:57 AM | அ+அ அ- |

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாக 525 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது குறித்த விவரம்:
சென்னை சாலை விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வைக்கவும் பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவ்வப்போது குறிப்பிட்ட விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது.
இதன்படி, மோட்டாா் வாகனச் சட்டத்தை மீறி சிறுவா்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் சிறப்பு வாகனத் தணிக்கை செவ்வாய்க்கிழமை நகா் முழுவதும் நடத்தப்பட்டது. 18 வயதுக்கு குறைவான வயதுள்ள சிறுவா்கள் வாகனம் ஓட்டுவதையும், இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேலும் செல்வோரையும் குறி வைத்து இந்த சிறப்பு வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.
செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் வாகனங்களை சிறுவா்கள் ஓட்டியது தொடா்பாக 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட சிறுவா்களின் பெற்றோரை வரவழைத்து, போக்குவரத்து உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் ஆகியோா் சிறுவா்கள் வாகனம் ஓட்டுவதினால் ஏற்படும் விபத்து, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மேலும் போலீஸாா், அவா்களிடம் சட்டப்படி அபராதம் வசூலித்து, ஒரு உறுதி மொழிக்கடிதத்தையும் பெற்றனா்.