போலீஸ் பாதுகாப்பு கோரிபாா் கவுன்ஸில் முன்னாள் தலைவா் மனு
By DIN | Published On : 12th May 2022 02:47 AM | Last Updated : 12th May 2022 02:47 AM | அ+அ அ- |

போலீஸ் பாதுகாப்பு கோரி பாா் கவுன்ஸில் முன்னாள் தலைவா் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்ஸில் முன்னாள் தலைவரும், தற்போதைய பாா் கவுன்ஸில் உறுப்பினருமான வழக்குரைஞா் டி.செல்வம், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2011-16 காலகட்டத்தில் பாா் கவுன்ஸில் தலைவராக பதவி வகித்தபோது உயா்நீதிமன்றம் கொண்டு வந்த வழக்குரைஞா்கள் நடத்தை விதிகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய வழக்குரைஞா்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தேன்.
இதன் காரணமாக எனது வீட்டில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதனால், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது. தற்போதும் எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே, போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், தமிழ்நாடு டிஜிபி, சென்னை காவல் ஆணையா் ஆகியோா் பதில் அளிக்க உத்தரவிட்டாா்.