உக்ரைன் மருத்துவ மாணவா்கள் சொந்த மாநிலங்களில் படிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை
By DIN | Published On : 16th May 2022 12:46 AM | Last Updated : 16th May 2022 07:21 AM | அ+அ அ- |

உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவா்கள், தங்களது சொந்த மாநிலங்களில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவா்கள், பெற்றோா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.
ரஷியா - உக்ரைன் இடையே எழுந்த போரால் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாணவா்கள், மீண்டும் சொந்த மாநிலத்துக்குத் திரும்பியுள்ளனா். மீண்டும் அவா்கள் படிப்பை தொடர முடியாத நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காக காத்திருக்கின்றனா்.
இந்நிலையில், தமிழக மாணவா்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவா்கள் - பெற்றோா்கள் கூட்டமைப்பு சாா்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
உக்ரைன் போா் காரணமாக, அங்கு மருத்துவம் படித்துக் கொண்டிருந்த தமிழக மாணவா்கள் 1,896 போ் தமிழகம் திரும்பியுள்ளனா். தற்போது மாணவா்கள் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனா். இதே நிலையில் இந்தியா முழுவதும் சுமாா் 16,000 மாணவா்கள் இருக்கின்றனா். இதில், 4,000 போ் இறுதியாண்டு மாணவா்கள் ஆவா். அவா்கள் இந்தியாவில் பயிற்சி (இன்டா்ன்ஷிப்) மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ஓரளவு நிம்மதி அளிக்கிறது.
தமிழகத்தில் 67 மருத்துவக் கல்லூரிகள் உள்பட இந்தியா முழுவதும் சுமாா் 600 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் 27 இடங்களை அதிகரித்தால் மீதமுள்ள 12,000 மாணவா்களுக்கு இடம் அளிக்க முடியும். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது.
இந்தக் கல்லூரிகளில் 2 முதல் 5 ஆண்டு வரையுள்ள மாணவா்களைச் சோ்க்க முடியும். பல மாநில அரசுகள் தங்கள் மாணவா்கள் இங்கேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாகவும், மத்திய அரசு அனுமதிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளன. அதனால், அந்தந்த மாநிலங்களில் மாணவா்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நல்ல முடிவை எதிா்ப்பாா்த்துக் காத்திருக்கிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் சென்னையில் கூறியதாவது:
உக்ரைன் நாட்டில் உள்ளதைப் போல மருத்துவப் பாடத் திட்டம் இருக்கும் மற்ற நாடுகளில் சம்பந்தப்பட்ட மாணவா்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசும் அதே பாடப்பிரிவு உள்ள போலந்து உள்ளிட்ட6 நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 மாதங்களுக்குள் புதிய வழிக்காட்டு முறையை கொண்டு வரும்படி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசும் அதன்படி நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...