ரயில் கட்டணம் உயர்த்தும் திட்டமில்லை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
By DIN | Published On : 20th May 2022 04:57 AM | Last Updated : 20th May 2022 04:57 AM | அ+அ அ- |

சென்னை: இந்தியாவில் வரும் காலங்களில் ரயில் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்றும், மூத்த குடிமக்களுக்கு வழங்கி வந்த 50 சதவீத கட்டண சலுகையை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினர் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக "ஹைப்பர் லூப்' திட்டத்தை வடிவமைத்து உள்ளனர். இதனை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு திட்டத்தை வடிவமைத்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தென்னக ரயில்வேயில் அதிக யானைகள் விபத்துக்குள்ளாகின்றன. யானைகள் ஒருமுறை கடந்த பாதையை நீண்ட நாள்கள் ஞாபகம் வைத்து அதே பாதையைப் பயன்படுகின்றன. யானைகள் தண்டவாளங்களைக் கடக்கும் இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு யானைகள் செல்வதற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரயில் பாதையில, நிலையங்கள் ரூ.760 கோடி செலவில் புனரமைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மொத்தமாக 5 ரயில் நிலையங்கள் முழுவதுமாக புனரமைக்கப்பட உள்ளன. தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,861 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஹைப்பர் லூப் திட்டத்திற்கு ரூ.8.5 கோடி மத்திய ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் பாதிக்காத வண்ணம் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் பயன்படுத்துவது சாத்தியமானதுதான். வரும் காலங்களில் ரயில் கட்டணங்களை உயர்த்த வாய்ப்பில்லை. பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. கரோனா காலத்தில் இருந்து நிறுத்தப்பட்ட முதியோர் கட்டண சலுகை தற்போது நீடிக்க வாய்ப்பு இல்லை. விரைவில் புறநகர் ரயில் மெட்ரோ ரயில் போன்று குளிர்சாதன வசதி செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.