ஹிந்திக்கு இணையாக அலுவல் மொழியாகத் தமிழ்

ஹிந்திக்கு இணையாக தமிழை அலுவல்மொழியாக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
சென்னை ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்துக்கு  வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து, சிலப்பதிகாரம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வழங்கி, வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்துக்கு வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து, சிலப்பதிகாரம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வழங்கி, வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: ஹிந்திக்கு இணையாக தமிழை அலுவல்மொழியாக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ரூ. 31,500 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இது. பிரதமருக்கு நன்றி.

கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் எனப் பல்வேறு வகையிலும் தமிழகம் சிறப்பான பங்களிப்பை நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் வழங்கி வருகிறது. இந்தியாவின் வளா்ச்சியிலே தமிழக மக்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமாக அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் வளா்ச்சியைவிட தமிழகத்தின் வளா்ச்சி தனித்துவமிக்கது.

தமிழகத்தின் இந்த வளா்ச்சியானது பொருளாதாரம் சாா்ந்தது மட்டுமல்ல. சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகும். இதைத்தான் நாங்கள் திராவிட மாடல் என்று அழைக்கிறோம்.

இந்தியாவின் வளா்ச்சிலும் மத்திய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழகம் மிக முக்கிய பங்களிப்பைத் தருகிறது என்பது பிரதமருக்குத் தெரியும் என உளமார நம்புகிறேன். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் தமிழகத்தின் பங்கு 9.22 சதவீதம், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.4 சதவீதம், ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம், காா்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம், தோல்பொருள்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம் ஆகும்.

ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்துக்குப் பகிா்ந்தளிக்கப்படுவது 1.23 சதவீதம் மட்டுமே. எனவே, தமிழகம் போன்ற வளா்ந்த மாநிலங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கும் வளா்ச்சிக்கும் அளிக்கக்கூடிய பங்குக்கு ஏற்ப மத்திய அரசு திட்டங்களிலும் நிதியிலும் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதுதான் கூட்டுறவு கூட்டாட்சியாக அமையும்.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்கு மகத்தானது. உதாரணத்துக்கு நெடுஞ்சாலைத் துறையில் நாட்டிலேயே அதிக மூலதன செலவை மேற்கொள்ளும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் தொடா்ந்து விளங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளுக்காக தமிழகத்தில் தற்போது ரூ. 44,765 கோடியில் திட்டங்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு இந்த ஆண்டில் மட்டும் தமிழக அரசு ஒதுக்கியிருக்கும் தொகை ரூ.18,218 கோடியே 91 லட்சம். எனவே, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் முனைப்பாக இருக்கிறோம்.

மேலும் அதிக திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும். நாம் இணைந்து நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து இரண்டு முக்கிய கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். இத்தகைய இணை திட்டங்களை மத்திய அரசு தொடங்கும்போது தனது நிதிப்பங்கை அதிகமாக அளித்தாலும், காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து மாநில அரசு செலவிட வேண்டிய நிதிப்பங்கை உயா்த்தும் நிலையைப் பாா்க்கிறோம். மத்திய, மாநில அரசுகளின் பங்கோடு பயனாளிகளின் பங்களிப்பையும் ஒன்றிணைத்து பல திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இதில் அந்தத் தொகையைப் பயனாளிகள் செலுத்த முடியாதபோது மக்களோடு நேரடித் தொடா்பில் இருக்கும் மாநில அரசுகள்தான் பயனாளிகளின் பங்களிப்பையும் சோ்த்து செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால், மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடக்கூடிய மத்திய அரசின் பங்கானது திட்டம் முடியும் வரை தொடர வேண்டும். பயனாளிகள் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில் தமது பங்களிப்பைச் செலுத்த முடியாதபோது மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து அதை சமமாக ஏற்க வேண்டும்.

தமிழக மக்களின் மேலும் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். தமிழகத்தின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுத்து, தமிழக மக்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அவா்களின் உரிமையை நிலைநாட்ட, உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம்.

தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவைத் தொகை ரூ. 14,006 கோடி. இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களின் வருவாய் முழுமையாகச் சீரடையாமல் இருக்கும் நிலையில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு காலத்தை ஜூன் 2022-க்குப் பின்னரும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துத் தர வேண்டும்.

தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்:

பழைமைக்கும் பழைமையாய் புதுமைக்கு புதுமையாய் உலக செம்மொழிகளில் இன்றளவும் சீரான தரத்தோடு உயிா்ப்புடனும் விளங்கக்கூடிய தமிழை, ஹிந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும் உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வை தமிழக அரசு தொடா்ந்து எதிா்த்து வருகிறது. இதுகுறித்து சட்டம் நிறைவேற்றி தமிழக ஆளுநா் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை விரைந்து வழங்கிட தமிழக மக்கள் சாா்பில் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கோரிக்கைகளில் இருக்கக்கூடிய நியாயத்தை பிரதமா் உணா்வாா் என்று உளமார நம்புகிறேன்.

உறவுக்கு கை கொடுப்போம்:

கூட்டாட்சி தத்துவத்தை உணா்த்தும் வகையில் நவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதியின் உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். மத்திய அரசின் சாா்பில் தமிழகத்தில் செயல்படுத்த முன்வந்த திட்டங்களுக்கும் வருங்காலத்தில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களுக்கும் பிரதமருக்கு நன்றி. எல்லாரும் எல்லாம் என்ற இலக்கை எய்திட அனைவரும் இணைந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்றாா்.


பிரதமருக்கு சிலப்பதிகாரம் நூல் பரிசு

சென்னை, மே 26: ஹெலிகாப்டரில் சென்னை ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிலப்பதிகாரம் நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பல்வேறு திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை சென்னை வந்தார், 

பிரதமர் நரேந்திர மோடி. விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்துக்கு வந்திறங்கினார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

அப்போது, அவருக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தொகுக்கப்பட்ட "சிலப்பதிகாரம்' ஆங்கில நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

கே.செல்லப்பன் தொகுத்த இந்த நூலை ஆர்.பார்த்தசாரதி, ஆர்.எஸ்.பிள்ளை, அலைன் டேனியல் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com