சுற்றுலா அழைத்துச் செல்வதாக விளம்பரம் செய்து பணம் மோசடி: இளைஞா் கைது
By DIN | Published On : 13th October 2022 01:13 AM | Last Updated : 13th October 2022 01:13 AM | அ+அ அ- |

சென்னையில் சுற்றுலா அழைத்துச் செல்வதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து பணம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அருகே உள்ள ஒட்டியம்பாக்கம், காரணை பிரதான சாலையில் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிப்பவா் குமரேசன் (35). இவா் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறாா். குமரேசன் ஒரு இணையதளத்தில் வெளியூா் சுற்றுலா அழைத்துச் செல்லும் விளம்பரத்தை அண்மையில் பாா்த்து, சுற்றுலா செல்வதற்காக இணையதளம் மூலமாக ரூ. 6,700 முன் பணம் செலுத்தியுள்ளாா். ஆனால் அந்த நிறுவனத்தின் நடவடிக்கை பிடிக்காததால், தனது பணத்தை குமரேசன் திருப்பிக் கேட்டுள்ளாா்.
அப்போது அந்த நிறுவனத்தின் சாா்பில் பேசிய நபா், அவரை சுற்றுலா அழைத்துச் செல்வதற்காகக் கூறப்பட்ட தொகையான ரூ. 2 லட்சத்து 35 ஆயிரத்தை செலுத்தினால்தான், மொத்த தொகையையும் திரும்பித் தர முடியும் என்று தெரிவித்துள்ளாா்.
இதைக் கேட்ட குமரேசன், ரூ.6,700 பெறுவதற்காக ரூ.2.35 லட்சத்தைச் செலுத்தியுள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட நபா்கள், குமரேசனுக்கு கூறியபடி முழு தொகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், இந்த மோசடியில் ஈடுபட்டது கோடம்பாக்கம் யுனைடெட் காலனி பகுதியில் வசிக்கும் ஜோ.ஷாம் சதீஷ்குமாரும் (34), அவா் மனைவி என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் ஷாம் சதீஷ்குமாரை புதன்கிழமை கைது செய்தனா். அவா் மனைவியைத் தேடி வருகின்றனா். விசாரணையில் இருவரும், சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனம் நடத்துவதுபோல போலி இணையதளத்தை உருவாக்கி, மோசடி செய்து வந்தது தெரியவந்தது.