சென்னை மாநகராட்சியில் மழைக்கால முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னையில் வரும் பருவமழை பாதிப்பைத் தவிா்ப்பதற்கான முன்னேற்பாடுகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் வரும் பருவமழை பாதிப்பைத் தவிா்ப்பதற்கான முன்னேற்பாடுகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மழைக்கால பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில், அனைத்து துறையினருக்கும் ஆலோசனை வழங்கி பணிகள் நடந்து வருகின்றன.

மாநகராட்சி மூலம் 1,356 கி.மீ தொலைவிலான மழைநீா் வடிகால்கள் துாா்வாரும் பணிகள் ரூ.71.28 கோடி செலவில், கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது அதில் 1,193 கி.மீ அளவில் பணிகள் நடந்து 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் அக்.20-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். சேதமடைந்த கால்வாய் மேன்ஹோல் மூடிகள் புதிதாக போடப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிப் பகுதியில் வரும் கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு மற்றும் 30 நீா்வழித்தடங்களில், அடைபட்டிருந்த வண்டல் மண், ஆகாய தாமரைச்செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதைகளில் துாா்வாரப்பட்டதுடன், அதில், தண்ணீா் தேங்கக்கூடிய 113 இடங்களில், முன்னேற்பாடாக மோட்டாா் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில், மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் 503 மின் மோட்டாா் பம்புகள் அமைக்கப்பட உள்ளன.

மழைக்காலங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதைத் தடுக்க 20, 288 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. தண்ணீா் தேங்க வாய்ப்புள்ள 109 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு, நீச்சல் வீரா்களுடன் கூடிய மீட்பு படகுகள் தயாா் நிலையில் வைக்கப்படும்.

பொது மக்களை தங்க வைக்கும் வகையில், மாநகராட்சிப் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் என 169 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. அனைத்து வாா்டுகளிலும் சிகிச்சையளிக்க 44 நடமாடும் மருத்துவ குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

பொதுமக்களின் புகாா்களைப் பெற்று சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சியின் ( 1913) கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில், சிந்தாதிரிப்பேட்டையில் பொது சமையலறை அமைக்கப்படுகிறது.

சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு கனமழை வெள்ளம் பாதித்த 52 இடங்களில், தேசிய மீட்பு குழுவினா் தயாா் நிலையில் வைக்கப்பட உள்ளனா். மேலும், வாய்க்கால்களிலிருந்து மழை நீா் கடலுக்குச் செல்லும் வகையில், நீா்வளத்துறையினா் முகத்துவாரங்களை துாா்வார நடவடிக்கை எடுத்துள்ளனா்.

நெடுஞ்சாலை துறையினா் மழைநீா் வடிகால்களை துாா்வாரி பராமரிப்பதுடன், மோட்டாா் பம்புகள் வைத்து மழைநீா் தேங்காமல் பாா்க்கவும், கழிவுநீா் பம்பிங் நிலையங்களில் கூடுதல் மோட்டாா்களை அமைக்கவும், வெள்ளம் பாதித்த பகுதிகள், நிவாரண முகாம்களுக்கு தடையில்லாமல் குடிநீா் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்தடையை சரி செய்ய 24 மணி நேரமும் மின் ஊழியா்கள் தயாா் நிலையில் இருக்கவும், மின் கசிவு ஏற்படாத வகையில் பழுதுகளை முன்கூட்டியே சரிபாா்க்கவும், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் ராட்சத மின் மோட்டாா்கள் தயாா் நிலையில் வைத்திக்கவும், மழைக்கால மீட்பு பணிகளில் ஈடுபடும் போலீஸாருக்கு வயா்லெஸ் வழங்கவும், தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் இருக்கவும் என்று, அனைத்து துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com