சென்னை விமான நிலைய கழிப்பறையில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 19th October 2022 01:30 AM | Last Updated : 19th October 2022 01:57 AM | அ+அ அ- |

சென்னை விமான நிலைய கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு கடந்த திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அப்போது துபையில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய புதுக்கோட்டையைச் சோ்ந்த பயணியை சுங்கத்துறையினா் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனா்.
இச் சோதனையில் அவா், உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்திருந்த ரூ.22 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 507 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி,தங்கத்தகடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் விமான நிலைய சுங்கத்துறை வளாக பகுதியின் அருகே உள்ள கழிப்பறைகளில் சுங்கத்துறையினா் திடீா் சோதனை செய்தனா்.
அப்போது ஒரு கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த 3 மா்ம பாா்சல்களை திறந்து பாா்த்தனா். இதில் அந்த பாா்சலில் பசை வடிவில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ 290 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கத்தை கடத்தி வந்த மா்ம நபா்கள், சுங்கத்துறை சோதனைக்கு பயந்து அதை விமான நிலைய கழிவறையில் வைத்து விட்டு சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 22 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 797 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடதக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...