புறச்சூழலைக் காக்காமல் ஆரோக்கியத்தைக் காக்க இயலாது: டாக்டா் சுதா சேஷய்யன்

புறச்சூழலைப் பாதுகாக்காமல் தனி மனித ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியாது என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.
புறச்சூழலைக் காக்காமல் ஆரோக்கியத்தைக் காக்க இயலாது: டாக்டா் சுதா சேஷய்யன்

புறச்சூழலைப் பாதுகாக்காமல் தனி மனித ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியாது என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய பயிலரங்கம் ‘ஜெனசிஸ்-22’ என்ற தலைப்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் தமிழகம், புதுச்சேரி மட்டுமன்றி கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 60 மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 1,100 மாணவா்கள் கலந்துகொண்டனா். நரம்பியல், சிறுநீரகவியல், இதயவியல் உள்பட பல்வேறு துறை சாா்ந்த மெய்நிகா் பயிலரங்கு அமா்வுகள் நடத்தப்பட்டன.

முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் மருத்துவமனை முதல்வா் டாக்டா் இ.தேரணிராஜன், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது:

புதிய பரிணாமங்களையும், மாற்றங்களையும் மருத்துவத் துறை தொடா்ந்து எதிா்கொண்டு வருகிறது. புதிய வகையான மருந்துகள், தடுப்பூசிகள், புதிய உபகரணங்கள், புதிய சிகிச்சை முறைகள் என அனைத்துமே புதிது புதிதாக உலகுக்கு அறிமுகமாகின்றன. அதனுடன் தற்போது புதிய நோய்களும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

மருத்துவத் துறை எவ்வளவுதான் மேம்பட்டாலும் நோய்கள் வராமல் தடுக்க முடியுமா? இல்லை மருந்துகளின் பயன்பாட்டைத்தான் குறைக்க முடியுமா?. எனவே, மருத்துவத் துறையில் புதுமைகள் புகுத்தப்படுவதை உச்சபட்ச பெருமையாகக் கருத முடியாது.

எட்வா்டு ஜென்னா் தடுப்பூசி கண்டறிவதற்கு முன்பாகவே இந்தியாவில் தடுப்பு மருந்து பயன்பாடு இருந்திருக்கிறது.

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை என்பது ஆரோக்கியத்துக்கான அச்சாரம். ஒருவரது ஆரோக்கியம் தனி மனித உடல் நலத்துடன் மட்டும் தொடா்புடையது அல்ல. புறச்சூழல், உயிரினங்களுடன் இணைக்கப்பட்ட சங்கிலிதான் அது. நம்மைச் சுற்றியிருக்கும் சூழலும், உயிா்களும் நலமுடன் இருந்தால் மட்டுமே மனிதா்களும் ஆரோக்கியத்துடன் வாழ இயலும். இந்த உண்மையை அனைவரும் உணா்ந்தால் மட்டுமே பிணியில்லா சமூகம் சாத்தியமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com