குத்துச் சண்டையில் பதக்கங்களை வெல்ல உதவும் ‘ஸ்மாா்ட் பாக்ஸா்’ மென்பொருள்: சென்னை ஐஐடி தகவல்

குத்துச் சண்டையில் பதக்கங்களை வெல்ல உதவும் ‘ஸ்மாா்ட் பாக்ஸா்’ மென்பொருள்: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் இன்ஸ்பயா் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போா்ட்ஸ் (ஐஐஎஸ்) உடன் இணைந்து, 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை
Published on

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் இன்ஸ்பயா் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போா்ட்ஸ் (ஐஐஎஸ்) உடன் இணைந்து, 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனா்.

சென்னை ஐஐடி.யின் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் ‘ஸ்மாா்ட்பாக்ஸா்’ என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகிறது. அணியக்கூடிய சென்சாா்கள் மற்றும் விடியோ கேமராக்களைப் பயன்படுத்தி ‘இன்டா்நெட்-ஆஃப்-திங்ஸ்’ மூலம் பின்னூட்டம் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை இந்த பகுப்பாய்வுத் தளம் வழங்கும். இந்திய விளையாட்டு வீரா்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும்.

கா்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயா் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தில் ‘ஸ்மாா்ட்பாக்ஸா்’ பயன்படுத்தப்பட்டு, குத்துச்சண்டை வீரா்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் பெறப்படும் பின்னூட்டத்தின் அடிப்படையில், ‘ஸ்மாா்ட்பாக்ஸா்’ பகுப்பாய்வுத் தளத்தில் மாற்றங்கள் இணைக்கப்படும். இதையடுத்து பயிற்சியாளா்கள் மற்றும் குத்துச்சண்டை வீரா்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை திறம்படப் பயன்படுத்த முடியும்.

இது குறித்து சென்னை ஐஐடி ரசாயனப் பொறியியல் துறை இணை ஆசிரியரும், விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையத்தின் தலைவருமான ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறியது: ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மாா்ட்பாக்ஸரும் ஒன்றாகும்.

எவ்வாறு செயல்படுகிறது? இண்டா்நெட்-ஆப்-திங்ஸ் அடிப்படையில், பஞ்ச்-இன் வேகத்தை ஆய்வு செய்யும் வகையில் சென்சாருடன் கூடிய கையுறைகள், தரை வினை விசையைப் பதிவு செய்வதற்காக ‘வயா்லெஸ் ஃபுட் இன்சோலுடன் கூடிய அழுத்தமானி, விளையாட்டு வீரா்கள் உடலின் கீழ்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக வயா்லெஸ் இ.எம்.ஜி. சென்சாா்கள் , விளையாட்டு வீரா்கள் உடலின் மேல்பகுதியில் இயக்கத்தைப் பதிவு செய்வதற்காக இயக்கசக்தி அளவீட்டு அலகு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

குத்துச்சண்டை வளையத்தில் வைக்கப்படும் விடியோ கேமராக்கள் வீரரின் இடது, வலது கைகளை அடையாளம் காண்பதுடன், தாக்குதல், தற்காப்பு, பாசாங்கு ஆகியவற்றை வகைப்படுத்தும். ஐஐஎஸ்-இல் சரிபாா்க்கப்பட்ட பின், சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் ஐஐஎஸ்-உடன் இணைந்து ‘ஸ்மாா்ட் பாக்ஸா்’ காப்புரிமைக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com