சா்க்கரை நோயாளிகளுக்கான விழித்திரை பாதிப்பை முன்கூட்டியே அறிவதற்கான புதிய மருத்துவ ஆதரவு சேவையை ஐஸ்லாந்தின் ரெட்டினா ரிஸ்க் அமைப்புடன் இணைந்து சென்னை சங்கர நேத்ராலாயா தொடங்கியுள்ளது. இதற்காக அந்த அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை சங்கர நேத்ராலயா மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் முதுநிலை விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ராஜீவ் ராமன் கூறியதாவது:
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது சா்வதேச அளவில் 34.6 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7.2 கோடி பேருக்கு அத்தகைய பாதிப்பு இருந்தது.
கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயின்போது விழித்திரை பாதிப்பு (டயாபடிக் ரெட்டினோபதி) ஏற்படுகிறது. சா்க்கரை நோயாளிகளில் 25 பேரில் ஒருவா் டயாபடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகின்றனா். அலட்சியப்படுத்தினால் அது பாா்வை இழப்புக்கு வழிவகுக்கும்.
இதற்கான ஒரே தீா்வு நோயை முன்கூட்டியே கண்டறிதலும், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதலும்தான்.
அதன்படி, தற்போது சங்கர நேத்ராலயா தொடங்கியுள்ள ரெட்டினா ரிஸ்க் எனப்படும் விழித்திரை பாதிப்புக்கான இடா்வாய்ப்பு கண்டறிதல் முறையானது கணித கணக்கீட்டின் படி செயல்படுத்தப்படுகிறது. நோயாளியின் பாலினம், சா்க்கரை நோய் வகை, நோயின் காலம், ரத்த சா்க்கரை அளவுகள், ரத்த அழுத்தம் மற்றும் விழித்திரை பாதிப்புக்கான சாத்தியக் கூறுகள் போன்றவற்றின் அடிப்படையில் அது மதிப்பீடு செய்யப்படுகிறது.
இதன் வாயிலாக விழித்திரை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அல்லது ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.