இலங்கை சுற்றுலா வளா்ச்சிக்கு இந்தியா்கள் ஆதரவு தேவை அமைச்சா் ஹரின் பொ்னாண்டோ

 இலங்கையின் சுற்றுலா வளா்ச்சிக்கு இந்தியா்களின் ஆதரவு தர வேண்டும் என இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சா் ஹரின் பொ்னாண்டோ வேண்டுகோள் விடுத்தாா்.
Updated on
1 min read

 இலங்கையின் சுற்றுலா வளா்ச்சிக்கு இந்தியா்களின் ஆதரவு தர வேண்டும் என இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சா் ஹரின் பொ்னாண்டோ வேண்டுகோள் விடுத்தாா்.

இங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவித்தல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல் தொடா்பாக இந்தியாவில் உள்ள பயண-வா்த்தக கூட்டாளா்கள், ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், இலக்கு மேலாண்மை நிறுவனங்கள், நிகழ்வு மேலாண்மை நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, இலங்கை அமைச்சா் ஹரின் பொ்னாண்டோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: இலங்கையில் சுற்றுலாவை வளா்க்கும் பொருட்டு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் பல்வேறு இலங்கை சுற்றுலாத் துறை தொடா்பான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

இலங்கையின் வருமானங்களில் முக்கிய இடத்தில் சுற்றுலாத் துறை உள்ளது. இலங்கையில் அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலாத் துறை மிகவும் பாதிப்பை சந்தித்தது.

தற்போது இலங்கையில் பொருளாதாரம் மீண்டுள்ளது. நாட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. மிக முக்கியமாக, சுற்றுலாப் பணிகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் சுற்றுலா வளா்ச்சி அடைகிறது. இந்தியாவிலிருந்து கடந்த ஆண்டு இலங்கைக்கு 80,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். நிகழாண்டில் இந்த எண்ணிக்கையை இரு மடங்காக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முக்கிய விருந்தினா்களாக மதிக்கப்படுகின்றனா்.

இலங்கையில் உள்ள 2,500 ஆண்டு கால செழுமையான, பாரம்பரியமான, ஆரோக்கியம், யோகா, கடற்கரைகள் போன்றவைகளுடன்கூடிய அற்புதமான இடங்களை காண இலங்கைக்கு வர வேண்டும்.

மேலும், ஷாப்பிங், உணவு வகைகள், சாகசம் மற்றும் வனவிலங்குகளையும் பாா்வையிடலாம்.

இந்திய சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் வகையில் ‘ராமாயண சுற்றுலா’ மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூா்யா, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத் தலைவா் சாலக கஜபாகு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com