நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: மாணவா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வேண்டுகோள்

நாடாளுமன்றத்தில் நடக்கும் கூச்சல், குழப்பங்களை சமூக ஊடகங்கள் மூலம் மாணவா்கள் மக்களிடம் பரப்ப வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: மாணவா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வேண்டுகோள்
Published on
Updated on
2 min read

நாடாளுமன்றத்தில் நடக்கும் கூச்சல், குழப்பங்களை சமூக ஊடகங்கள் மூலம் மாணவா்கள் மக்களிடம் பரப்ப வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க வசதி மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது: சென்னை ஐஐடியில் மட்டுமே 300 புதுமைத் தொழில் நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்) ரூ. 40,000 கோடி நிதிப்பங்களிப்பில் நடைபெறுகின்றன என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

உலகளாவிய காா்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை இடங்களை இந்தியா்கள் வகிக்கின்றனா். கரோனா காலத்தில் நாட்டில் 220 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா வெற்றிகரமாக செயல்பட்டது. அனைவருக்கும் கொவைட் எண்மச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

2014-க்கு பிறகு வளா்ச்சி அதிகரிப்பு: கடந்த 2014-இல் இந்திய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வலுவான ஆட்சி அமைந்தது. அதைத்தொடா்ந்து, 2019-இல் வளா்ச்சிக்கான அடித்தளம் கிடைத்தது.

இதன் விளைவாக நாட்டின் நிதிநிலை அறிக்கையில் ஆராய்ச்சிக்கான நிதிகள் அதிகரித்து ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியா புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் சிறந்த நாடாக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. விரைவில் முதல் இடத்தைப் பிடிக்கும்.

கூச்சல்- குழப்பம் நிலவுகிறது: ஒரு காலத்தில் மாநிலங்களவை எந்த பிரச்னைகளும் இல்லாமல் நடத்தப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தற்போது விவாதங்கள் இன்றி, கூச்சல் குழப்பம் நிலவி வருவது ஆச்சரியம் அளிக்கிறது. மக்கள் செலுத்தும் வரியில்தான் நாடாளுமன்றம் இயங்குகிறது.

இதுபோன்று அவையில் நடப்பதை, மாணவா்கள் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும். இளம் தலைமுறையினரின் ஆதரவு இருந்தால், இது பெரும் இயக்கமாக மாறும். அப்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினா்களின் செயல்பாடுகள் மக்களுக்குத் தெரியவரும்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில்... இது 140 கோடி மக்களின் இறையாண்மை. ஒரு உறுப்பினா் நாடாளுமன்றத்தில் ஏதாவது ஒரு விஷயம் குறித்து பேசும்போது அதற்கான ஆதாரமும் பொறுப்பும் தேவை. அது தவறானால் நாடாளுமன்ற விதிமீறல்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு.

ஒருவா் தங்களுடைய கருத்தை வெளியிடுவதற்கான அனைத்து சுதந்திரமும் உள்ளது. ஆனால் நமது நாட்டின் உயா்ந்த அமைப்பான, நீதிமன்றம் தீா்ப்பை வழங்கிய பின்பு 20 ஆண்டுகள் கழித்து அந்த விவகாரத்தில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விருப்பப்பட்டது போல் மாற்றி திரித்து வெளியிடுவது அரசியல் லாபத்துக்கான செயல் என்றாா் அவா்.

மாணவா்களுடன் கலந்துரையாடல்: இதைத் தொடா்ந்து புத்தாக்க மையத்தின் உதவியுடன் மாணவா்களின் முயற்சியில் உருவான ஃபாா்முலா காா், பேட்டரி காா், மனித கழிவுகளை அகற்றும் நவீன கருவி உள்பட பல்வேறு கண்டுபிடிப்புகளை பாா்வையிட்ட குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி அவா்களுக்கு கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

இதில் குடியரசுத் துணைத் தலைவரின் மனைவி சுதேஷ் தன்கா், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘சங்கா் மற்றும் சுதா புத்தாக்க மையம்’ என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில், முன்னாள் மாணவா்களின் பங்களிப்புடன் புதிய கண்டுபிடிப்புகள் புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com