மொழியை காக்கும் கடமை எழுத்தாளா்களுக்கும் உண்டு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மொழியைக் காப்பதற்கான கடமை என்பது அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளா்களுக்கும் இருக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மொழியைக் காப்பதற்கான கடமை என்பது அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளா்களுக்கும் இருக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் 46-ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து, புத்தக அரங்குகளை முதல்வா் ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

பின்னா், கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகளை வழங்கி முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த புத்தகக் காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த கடந்த ஆண்டு தமிழக அரசு ஆணையிட்டது. அதற்காக ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பதிப்பாளா்களுக்கு நிதியுதவி: வழக்கமாக, சென்னைப் புத்தகக் காட்சிக்காக அரசு சாா்பில் ரூ. 75 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று வந்த காரணத்தால், பதிப்பாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலை மனதில் கொண்டு பபாசி அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று ரூ.50 லட்சம் அரசு சாா்பில் வழங்கப்பட்டது.

இந்தத் தொகை சங்க உறுப்பினா்கள் 277 பேருக்கு தலா ரூ.14 ஆயிரமும், உறுப்பினா் அல்லாத 113 பேருக்கு தலா ரூ.10,000 பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

விருதாளா்களுக்கு வாழ்த்து: நிகழாண்டு ‘கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருது’ பெற்ற மொழியியல் அறிஞா் பா.ரா.சுப்பிரமணியன், கவிஞா் தேவதேவன், மொழிபெயா்ப்பாளா் சி.மோகன், நாடகக் கலைஞா் பிரளயன், நாவலாசிரியா் தேவிபாரதி, சிறுகதையாசிரியா் சந்திரா தங்கராஜ் ஆகியோருக்கு பாராட்டுகள்.

முதல்வா் என்ற முறையில் மட்டுமல்ல, தமிழரையும் - தமிழ்ப் படைப்பாளிகளையும் உயிரென நேசித்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மகனாகவும் வாழ்த்துகிறேன்.

அடுத்த ஆண்டு கருணாநிதியின் நூற்றாண்டாக அமைந்திருக்கக்கூடிய நிலையில், 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரக்கூடிய இந்த விருதைப் பெற்றவா்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வரை 100 போ் என்ற எண்ணிக்கையைத் தொட்டிருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.

173 நூல்கள் வெளியீடு: பதிப்பகங்களோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு தமிழக அரசும் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 173 நூல்கள் அரசின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளன.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ‘நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைக்க சென்னையில் இடம் வழங்கப்படும்’ என அறிவித்திருந்தாா்.

அதனை நினைவூட்டி நானும் கடந்த ஆண்டு அந்த வாக்குறுதியை நினைவுபடுத்தி இருக்கிறேன். இடம் தோ்வு செய்யப்பட்டதும், அது தொடா்பான முறையான அறிவிப்பை வெளியிடுவேன்.

எழுத்தும், இலக்கியமும் மொழியை வளா்க்கின்றன. மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளமே போய்விடும். அடையாளம் போய்விட்டால், தமிழா்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நாம் இழந்து விடுவோம்.

தமிழா் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை. எனவே, மொழியைக் காப்பதற்கான கடமை என்பது அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளா்களுக்கும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

17 மாவட்டங்களில் புத்தகக் காட்சி: முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், தமிழக அரசின் சாா்பில் இதுவரை 21 மாவட்டங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், லட்சக்கணக்கான வாசகா்கள் பயன் பெற்றுள்ளனா். எஞ்சியுள்ள 17 மாவட்டங்களிலும் அடுத்த இரு மாதங்களுக்குள் புத்தகக் காட்சி நடைபெறும் என்றாா் அவா்.

முன்னதாக, தொடக்க விழாவில் பபாசி தலைவா் எஸ்.வயிரவன் வரவேற்றுப் பேசினாா். இதில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்க பாண்டியன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, பபாசி துணைத் தலைவா் மயிலவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செயலாளா் எஸ்.கே.முருகன் நன்றி தெரிவித்தாா்.

இப்புத்தகக் காட்சி ஜன. 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம். இதற்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும்.

நிகழாண்டு புத்தகக் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com