நூல்கள் வாசிப்பால் ஊக்கம்: பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம்

நூல்கள் வாசிக்கும் பழக்கமிருந்தால் ஊக்கம் பெற்று நாம் வாழ்க்கையில் உயர்வடையலாம் என பேச்சாளர் மோகனசுந்தரம் கூறினார்.
நூல்கள் வாசிப்பால் ஊக்கம்: பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம்
Updated on
1 min read

நூல்கள் வாசிக்கும் பழக்கமிருந்தால் ஊக்கம் பெற்று நாம் வாழ்க்கையில் உயர்வடையலாம் என பேச்சாளர் மோகனசுந்தரம் கூறினார்.
 சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் பபாசியின் 46-ஆவது புத்தகக் காட்சியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உரையரங்கில்
 "ஊக்கமது கைவிடேல்' எனும் தலைப்பில் அவர் பேசியதாவது: "ஊக்கமது கைவிடேல்' என்பது ஒளவையாரின் வரிகளாகும். அதையே மகாகவி பாரதி "ரௌத்திரம் பழகு' என காலத்துக்கு ஏற்ப மாற்றி எழுதினார்.
 தமிழில் அனைத்து இலக்கியங்களும் அழிந்தாலும், ஒளவையின் ஆத்திசூடி மட்டும் இருந்தால் போதும் என்றார் மகாகவி பாரதி. அந்த அளவுக்கு அறத்தையும்,வாழ்க்கை நெறிகளையும் ஒளவையார் நமக்கு அளித்துள்ளார்.
 நூல் வாசிப்பு என்பதே நமது வாழ்க்கையை உயர்த்தி நமக்கான சமூக மதிப்பைத் தருபவையாக உள்ளன. ஆகவேதான் தூக்கிலிடுவதற்கு முதல் நாள் வரை படித்துக் கொண்டே இருந்தார் பகத் சிங். புத்தகம் படிப்பதற்காகவே அறுவைச் சிகிச்சையைத் தள்ளிவைக்க மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தார் அண்ணா.
 ஊக்கத்தின் அருமையை கடந்த 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு உணர்த்தியவர் திருவள்ளுவர். அவர் ஊக்கமுடைமையைப் பாடியுள்ளார். மேலும், முயற்சியே வாழ்க்கையைச் சிறப்பாக்கும் என்றும் நமக்கு வள்ளுவர் அறிவுரை கூறுகிறார். ஆகவே, ஊக்கமுடைமையை
 கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை நூல் வாசிப்பின் மூலமே நாம் பெறலாம் என்றார்.
 நிகழ்ச்சியில் கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் "புத்தகமாகிறேன்' எனும் தலைப்பில் பேசியதாவது:- மனித சமூகத்தில் எல்லா காலங்களிலும் நல்லவை, தீயவை இருந்துள்ளன. திருவள்ளுவரின் திருக்குறள் மூலம் நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் அறிய முடிகிறது.
 வாழ்க்கையில் வெற்றி பெறுவதைவிட வாழ்க்கையையே வெற்றிகரமாக்குவதே சிறந்தது.
 நூல்கள் என்பது ஞானிகள் வாழும் இடம் என்றார் கவிஞர் கண்ணதாசன். நூலகத்தை திறக்கும்போது ஆயிரம் சிறைகள் மூடப்படுகிறது என்றார் சுவாமி விவேகானந்தர். எழுத்தாளரின் அனுபவங்கள் நூல்களில்தான் நிரம்பிக் கிடக்கின்றன. ஆகவே, அதை வாசிப்போர் அந்த அனுபவங்களை பெற்று வாழ்வில் சிறப்படையலாம்.
 பிரிட்டனில் செல்வந்தர் ஒருவர் தனது சொத்துகளை சமூக மேம்பாட்டுக்காக எழுதும் 10 எழுத்தாளர்களுக்கு எழுதி வைத்துச் சென்றுள்ளார். அதைப் போலவே தமிழகத்தில் செல்வந்தர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் ஏழை எழுத்தாளர்களைத் தத்தெடுத்து மாத ஊதியம் வழங்கி படைப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் "ஊருக்கு நல்லது செய்வேன்' எனும் தலைப்பில் பி.என்.பரசுராம் பேசினார். பபாசி தலைவர் எஸ்.வயிரவன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.கே.முருகன் வரவேற்றார். நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர் ஜே.ஹரிபிரசாத் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com