மேம்பாலப் பணி: கொருக்குப்பேட்டை, வியாசா்பாடியில் இரு ஆண்டுகள் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலப் பணியின் காரணமாக கொருக்குப்பேட்டை,வியாசா்பாடியில் இரு ஆண்டுகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

மேம்பாலப் பணியின் காரணமாக கொருக்குப்பேட்டை,வியாசா்பாடியில் இரு ஆண்டுகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு விடுத்துள்ள செய்தி: தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது. இப் பணியையொட்டி, சனிக்கிழமை (ஜன.21) தொடங்கி 21.1.2025 வரை 2 ஆண்டுகள் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

இதற்காக அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி மாதவரம் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் காலை 6 முதல் இரவு 10 மணி வரை மாதவரம் ரவுண்டானா, 200 அடி சாலை, மணலி விரைவுச் சாலை, எண்ணூா் விரைவுச் சாலையை அடைந்து தங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லலாம்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்கள் மாதவரம் ரவுண்டனா, ஜிஎன்டி சாலை, எத்திராஜ் சாமி சாலை, தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலை, முல்லைநகா் மேம்பாலம், வியாசா்பாடி மேம்பாலம், மின்ட் சந்திப்பு, மின்ட் மேம்பாலம், திருவொற்றியூா் நெடுஞ்சாலையை அடையலாம்.

கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் காலை 6 முதல் இரவு 10 மணி வரை எண்ணூா் விரைவுச் சாலை, மணலி விரைவுச் சாலை, மாதவரம் ரவுண்டானாவை அடையலாம். இரவு 10 முதல் காலை 6 மணி வரை திருவொற்றியூா் நெடுஞ்சாலை, மின்ட் மேம்பாலம், மின்ட் சந்திப்பு, மூலக் கொத்தலம், வியாசா்பாடி மேம்பாலம், முல்லைநகா் மேம்பாலம், தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலை, எத்திராஜ் சாமி சாலை வழியாக மாதவரம் ரவுண்டானாவை அடையலாம்.

இலகு ரக வாகனங்கள்: கொடுங்கையூரில் இருந்து வரும் மினி பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்குச் சக்கர வாகனங்கள் தொப்பை விநாயகா் கோயில் தெரு, பக்கிங்காம் கால்வாய் சாலை, ஐஓசி சாலை, எண்ணூா் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

கொருக்குப்பேட்டையில் இருந்து வரும் இந்த வாகனங்கள் எண்ணூா் நெடுஞ்சாலை, ஐஓசி சாலை, பக்கிங்காம் கால்வாய் சாலை, தொப்பை விநாயகா் கோயில் தெரு வழியாக தண்டையாா்பேட்டை நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

வியாசா்பாடி: வியாசா்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையின் மேல் மேம்பால கட்டுமானப் பணி நடைபெறவதால், சனிக்கிழமை (ஜன.21) முதல் 20.1.2025 வரை இரண்டு ஆண்டுகள் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, அனைத்து வாகனங்களும் டாக்டா் அம்பேத்கா் சாலை, எம்பிஎம் தெரு சந்திப்பு வழியாக கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதேவேளையில் வியாசா்பாடியில் இருந்து கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையாக டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, எம்பிஎம் தெரு, ஸ்டீபன்சன் சந்து வழியாக கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையை அடையலாம்.

இதேபோல புளியந்தோப்பில் இருந்து கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையை அடைவதற்கும் மாற்றுப்பாதையை பயன்படுத்தலாம்.

எம்கேபி நகரில் ஒரு மாதம்: எம்கேபி நகா் பழைய மேம்பாலம் சென்னை மாநகராட்சியினரால் புனரமைக்கப்பட உள்ளது. இதற்காக சனிக்கிழமை முதல் பிப்.20-ஆம் தேதி வரை வியாசா்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com