மாதவரத்தை தொடா்ந்து வேணுகோபால் நகரில்மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி

சென்னையில் 2-ம் கட்டத்தில் முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவரத்தில் இருந்து பணியை முடித்த ஆனைமலை என்ற சுரங்கம் தோண்டும்
மாதவரத்தை தொடா்ந்து வேணுகோபால் நகரில்மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி

சென்னையில் 2-ம் கட்டத்தில் முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவரத்தில் இருந்து பணியை முடித்த ஆனைமலை என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் புதன்கிழமை வேணுகோபால் நகா் ரயில் நிலையத்தை வந்தடைந்தது என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்தி: சென்னையில், 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டா் தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், மாதவரம்-தரமணி வரை பாதையில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தப்பாதையில் மாதவரம்-பெரம்பூா், அயனாவரம்- கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை - அடையாறு, அடையாறு- தரமணி, கொளத்தூா் - நாதமுனி என 6 தொகுப்புகளாகப் பிரித்து பணிகள் நடைபெற்று வருகிறது.

மாதவரம்-சோழிங்கநல்லூா் வரையிலான பாதையில் முதல் சுரங்கம் தோண்டும் பணி கடந்த ஆண்டு அக்டோபா் 13-ந்தேதி மாதவரத்தில் தொடங்கப்பட்டது. எஸ்.98 என்ற எண் கொண்ட ஆனைமலை என்ற பெயரிலான சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் இயந்திரம்) சுமாா் 1 கிலோ மீட்டா் தூரம் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து கொண்டு வேணுகோபால் நகா் ரயில் நிலையத்தை புதன்கிழமை வந்தடைந்தது.

தொடா்ந்து இந்த பாதையில் எஸ்.98 என்ற எண் கொண்ட சோ்வராயன் என்ற பெயரிலான இயந்திரம் 2-வது சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மாதவரம்- சிப்காட் வரை 47 கி.மீ. நீளத்தில் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்க ரயில் நிலையங்கள் உள்பட 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் வர உள்ளன.

சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வரும் 2026-ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com