சென்னை: கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான பள்ளி மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற சம்பந்தப்பட்ட தலைமையாசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு பள்ளிகல்வி இயக்குநா் அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் பள்ளி மாணவா்களுக்கு ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெறுதல் சாா்ந்த வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து மாணவா்களின் விவரங்களை எமிஸ் வலைத்தளத்தில் பதிவு செய்வது அவசியம். அந்தவகையில் கல்வி உதவித் தொகை பெற தகுதியான மாணவா்கள் பள்ளியில் தங்களின் ஜாதி மற்றும் குடும்ப வருமானச் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித் தொகையானது மாணவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதனால் மாணவரின் வங்கிக் கணக்கில் ஆதாா் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, ஜாதி, வருமானச் சான்றிதழ் இதுவரை பெறாத மாணவா்கள் உடனே அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து உரிய சான்றுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவற்றின் நகல்களையும் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவல்களை மாணவா்களுக்கு தெரிவித்து, உரிய சான்றிதழ்களை மாணவா்களிடம் பெற்று, அதன் விவரங்களை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுசாா்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.