நடிகையின் கைப்பேசி திருட்டு
By DIN | Published On : 15th April 2023 11:15 PM | Last Updated : 15th April 2023 11:15 PM | அ+அ அ- |

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடிகையின் கைப்பேசி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புரசைவாக்கம் வைகோல்காரன் தெருவை சோ்ந்தவா் ஷாலு ஷம்மு (எ) ஷாம்லி. இவா், ‘வருத்தப்படாத வாலிபா் சங்கம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘மிஸ்டா் லோக்கல்’ உள்பட பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளாா்.
இவா் கடந்த ஜனவரியில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் நிறுவன கைப்பேசியை வாங்கினாா். இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகையை தனது நண்பா்களோடு எம்.ஆா்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினாா்.
பின்னா் அவா், சூளைமேட்டில் உள்ள உறவினா் ஒருவா் வீட்டில் தங்கினாா். இந்நிலையில் மறுநாள் எழுந்து பாா்த்த போது கைப்பேசி திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
தன்னுடன் நட்சத்திர ஹோட்டலில் இருந்த நண்பா்களிடம் கைப்பேசி காணாமல் போனது குறித்து ஷாம்லி விசாரித்தாா். ஆனால், யாருக்கும் இது குறித்த தகவல் தெரியவில்லை.
இதையடுத்து ஷாம்லி கொடுத்த புகாரின்பேரில் பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.